search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water tribute poster"

    சேலம் மாவட்டத்தில் தண்ணீர் அஞ்சலி என விளம்பர போஸ்டர் ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது.
    ஆத்தூர்:

    செல்போன் இன்றி வாழ்பவர்களை பார்ப்பது கடினம். நகரம் முதல் கிராமம் வரை செல்போன் பரவி கிடக்கிறது. இதில் ‘வாட்ஸ்அப்’ பயன்படுத்துபவர்கள் தினமும் மெசேஜ், புகைப்படங்கள் அனுப்பிக் கொள்வது, ‘வாட்ஸ்அப்’ குரூப்பில் உரையாடுவது என மணிக்கணக்கில் நேரங்களை செலவிடுகின்றனர்.

    இந்த நிலையில் தண்ணீர் அஞ்சலி என விளம்பர போஸ்டர் ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. சேலம் மாவட்ட ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கோடை வெயில் காரணமாக நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. பெரும்பாலான குளங்கள், கிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிட்டது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக பல்வேறு இடங்களுக்கு அலையும் நிலை நீடிக்கிறது.

    இதனால் வெறுப்படைந்த, யாரோ ‘வாட்ஸ்அப்’பில் தண்ணீர் அஞ்சலி என போஸ்டர் தயார் செய்து உலா விட்டுள்ளனர். அதில், 2 கண்களில் இருந்து கண்ணீர் சிந்துவது, அதன் கீழ் தோற்றம் (ஆதி), நடுவில் குடிநீர் குழாய், மறைவு 2050 (ஆரம்பம்) என சித்தரித்துள்ளனர்.

    இதை தவிர கவிதை ஒன்றையும் எழுதியுள்ளனர். நீ(ர்) அழுதாலும், கண் (நீர்) வருவதில்லை. காரணம் மனிதன் தான் என்பது அவனுக்கும் புரியவில்லை. நீ(ர்) இருக்கும் வரை யாருக்கும் கவலை இல்லை. நீ(ர்) மறைந்தால் மனிதகுலமே இல்லை. நீ(ர்) இன்றி தவிக்கப்போகும் உயிருக்கும், உலகிற்கும் எங்களது பணிவான கண்ணீர் அஞ்சலி என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    இந்த போஸ்டரின் கடைசியில், மகன்கள் மரம், மலை, அணை, கணவன் காற்று, மகள்கள் குளம், ஏரி நதி என எழுதியுள்ளனர். இது செல்போன்களில் வைரலாக பரவி வருகிறது.
    ×