search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wealth Survey"

    • நண்பர்களைப் போன்ற வாழ்க்கை முறையைப் பெறுவதே பணக்காரர்களாக உணர வைப்பதாக பாதிக்கும் மேற்பட்டவர்கள் கூறியிருக்கின்றனர்.
    • மக்கள் செல்வநிலைக்கான அளவுகோலை தங்களுக்கும் பிறருக்கும் வித்தியாசமாக வைத்திருக்கின்றனர்.

    அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிதி சேவை நிறுவனமான சார்லஸ் ஷ்வாப் நிறுவனம், அமெரிக்காவில் பணக்காரர்களுக்கான சொத்து மதிப்பு தொடர்பாகவும், பணக்காரர்கள் பட்டியலில் இணைய வேண்டுமானால் அதற்கு தேவைப்படும் நிகர சொத்து மதிப்பு குறித்தும் கணக்கெடுப்பு நடத்தியது. உங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் பணக்காரரா, இல்லையா? உங்களைப் பணக்காரராகக் கருதுவதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும்? என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு அவர்கள் அளிக்கும் பதில்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

    இந்த கணக்கெடுப்பில், பெரும்பாலானோர் அமெரிக்காவில் பணக்காரர் என்ற அந்தஸ்தை பெறுவதற்கு 2.2 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்து இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். எனினும், இந்த கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களில் 48% பேர் தங்களிடம் சராசரி நிகர சொத்து மதிப்பு 5,60,000 டாலர் என்ற அளவில் இருக்கும்போதே தாங்கள் ஏற்கனவே செல்வந்தர்களாக உணர்கிறோம் என கூறியிருக்கிறார்கள்.

    இந்த ஆய்வறிக்கையில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில சுவையான தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அமெரிக்காவில் 1981லிருந்து 1996க்குட்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் "மில்லேனியல்ஸ்" எனவும், 1996லிருந்து 2010க்குட்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் "ஜென் இசட்" எனவும், 1965லிருந்து 1981க்குட்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் "ஜென் எக்ஸ்" எனவும், மற்றும் 1946லிருந்து 1964க்குட்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் "பேபி பூமர்ஸ்" எனவும் அழைக்கப்படுவர்.

    இளம் தலைமுறையினர் பணத்திற்காக போராடுகின்றனர் எனும் பரவலான கருத்து உள்ளது. இந்த கருத்துக்கு மாறாக மில்லேனியல்களும், ஜென் இசட் பிரிவினரும் தங்களை பணக்காரர்களாக உணர்கிறார்கள். அதிலும் 57% மில்லேனியல்ஸ் பிரிவினரும், 46% ஜென் இசட் பிரிவினரும் தாங்கள் வசதியாக இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், 41% ஜென் எக்ஸ் பிரிவினரும், 40% பேபி பூமர் பிரிவினரும் மட்டுமே தாங்கள் வசதியாக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

    இது அமெரிக்காவில் ஒருவரை செல்வந்தர் என கூறுவதற்கான குறியீடுகள் என்ன என்பதை கண்டறிவதில் உள்ள சிக்கலை காட்டுகிறது.

    அமெரிக்காவில் உயர்ந்து வரும் விலைவாசியையும், வீடுகளின் விலையையும் கணக்கில் கொண்டால் வாழ்க்கை நடத்த இதற்கு முன்பில்லாத அளவிற்கு பெரும் தொகை தேவைப்படுகிறது. நகரங்களில் இது மேலும் அதிகரிக்கும். ஆறு இலக்க சம்பளம் வாங்குவோர்களின் வாங்கும் திறன் நாட்டின் சில பகுதிகளில் மற்றவர்களை விட அதிகமாக இருக்கலாம். அதே சமயம் வீட்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, சொந்த வீடு வைத்திருக்கிறார்களா, இல்லையா என்பது, அவரவர் வாங்கியிருக்கும் கடன் போன்ற சூழ்நிலைகள், ஒருவரின் நிதி ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    சார்லஸ் ஷ்வாப் நிறுவனத்தின் நிதி திட்டமிடல் மற்றும் செல்வ மேலாண்மை அமைப்பின் நிர்வாக இயக்குனர் ராப் வில்லியம்ஸ் கூறுகையில், "மக்கள் செல்வநிலைக்கான அளவுகோலை தங்களுக்கும் பிறருக்கும் வித்தியாசமாக வைத்திருக்கின்றனர். இது ஒரு முரண்பாடான நிலை. நீங்கள் ஒருவரிடம் ஒரு டாலர் தொகையைக் கேட்டால், அவர்கள் அதை மீதமுள்ள தங்கள் வாழ்நாளில் மீதமுள்ள நாட்களின் அடிப்படையிலோ அல்லது நிதி ஆரோக்கியத்தின் அடிப்படையிலோ அர்த்தப்படுத்திக் கொள்வதில்லை" என தெரிவித்தார்.

    தங்களின் செல்வநிலை குறித்து எப்படி உணர்கிறார்கள் என்பதற்கு பதிலளிக்கும்போது தங்களுக்கு ஒப்பானவர்கள் குறித்து அவர்கள் கொண்டுள்ள எண்ணங்களும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் நண்பர்களைப் போன்ற வாழ்க்கை முறையைப் பெறுவதே தங்களை பணக்காரர்களாக உணர வைக்கிறது என்று கூறியிருக்கின்றனர்.

    சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர், தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் வாழ்க்கைமுறையை ஒப்பிடுவதாக கூறியிருக்கின்றனர். குறிப்பாக, மில்லினியல்கள் மற்றும் ஜென் இசட் பிரிவினரிடையே இந்த கருத்து வெளிப்படுகிறது. கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர், தங்கள் அன்புக்குரியவர்களுடன் ஒரு ஆரோக்கியமான உறவைக் கொண்டிருப்பதையே, நிறைய பணத்தை வைத்திருப்பதை விட மேலான செல்வநிலையாக கருதுவதாக கூறியுள்ளனர்.

    மேலும் 70% பேர் பெரிய வங்கிக் கணக்கை விட, பணத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் நிலையே செல்வம் என்று கூறியுள்ளனர்.

    ×