search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Weather Research Center"

    நெல்லை உள்பட 9 மாவட்டங்களில் இடி, பலத்த காற்றுடன் இன்று மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் சென்னை, திருத்தணி, வேலூர் உள்பட ஊர்களில் ‘கத்திரி’ வெயில் அன்றாடம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி, மக்களை வாட்டி வதைக்கிறது. அதே வேளையில், வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது.

    தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் கெங்கவல்லி, வீரகணூரில் தலா 5 செ.மீட்டரும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 4 செ.மீட்டரும், கடலூர் மாவட்டம் வேப்பூர், லக்கூர், ஊட்டி ஆகிய இடங்களில் 3 செ.மீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர், ஊத்தங்கரை, கரூர் மாவட்டம் பஞ்சபட்டி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தர்மபுரி, போச்சம்பள்ளி, திருச்சி மாவட்டம் துறையூர், பெரம்பலூர் மாவட்டம் வென்மாவூர், சேலம் தம்மம்பட்டி, வாழப்பாடி, கரூர் மாவட்டம் மாயனூர், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

    இந்தநிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) மழைபெய்ய வாய்ப்பு உள்ளது.

    இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். லேசானது முதல் மிதமானது வரை மழையை எதிர்பார்க்கலாம். அப்போது மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஒரு சில இடங்களில் அனல்காற்று வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    12-ந்தேதி (நாளை) ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி உள்ளது. இது தமிழகத்தை நோக்கி புயலாக மாறுமா? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தகவல் தெரிவித்தார். #NortheastMonsoon #Rain
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வங்கக்கடலில் கடந்த மாதம் உருவான ‘கஜா’ புயலால், டெல்டா மாவட்டங்கள் கடுமையான சேதங்களை சந்தித்தன. தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகி உள்ளது.

    இது வலுப்பெற்று வருகிற 12-ந்தேதி புயலாக மாறும் என்று கூறப்படுகிறது. மேலும் 13-ந்தேதி தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை நோக்கி நகரும் என்றும், 16-ந்தேதி மதியம் சென்னைக்கும்-விசாகப்பட்டினத்துக்கும் இடையே நெல்லூரில் புயல் கரையை கடக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

    இவ்வாறு புதிய புயல் உருவாக்கும் பட்சத்தில் அந்த புயலுக்கு தாய்லாந்து நாடு ‘பெய்ட்டி’ என்று பெயர் சூட்டி இருக்கிறது.

    இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் எஸ்.பாலச்சந்திரனிடம் கேட்டதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு:-



    இந்திய பெருங்கடலை ஓட்டி உள்ள தென்கிழக்கு வங்கக் கடல் மத்திய பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை மதியம் 5.30 மணி நிலவரப்படி(நேற்று) காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது.

    இது அடுத்த 48 மணி நேரத்தில் (12-ந்தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே, அது புயலாக மாறுமா? என்பது தான் தெரிய வரும். தற்போதைய சூழ்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் பட்சத்தில் 12-ந்தேதி முதல் சென்னை உள்பட வட தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. #NortheastMonsoon #Rain
    தொடர் கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சட்டக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #HeavyRain #AnnaUniversity #MadrasUniversity
    சென்னை:

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அவ்வப்போது பரவலாக மழை பெய்து வந்த நிலையில், தற்போது பருவமழை தீவிரமடைந்திருப்பதால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது. 

    இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள்பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. வருகிற 23-ந்தேதி வரை மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 



    தொடர் மழை காரணமாக இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக  துணைவேந்தர் துரைசாமி அறிவித்துள்ளார்.

    நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரிகளில் இன்றும், நாளையும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் அரசு சட்டக் கல்லூரி மற்றும் சீர்மிகு சட்டக் கல்லூரியில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #HeavyRain #AnnaUniversity #MadrasUniversity 

    தென்மேற்கு வங்க கடலில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டு இருப்பதால் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #NorthEastMonsoon #HeavyRain
    சென்னை:

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அவ்வப்போது பரவலாக மழை பெய்து வந்த நிலையில், தற்போது பருவமழை தீவிரமடைந்திருப்பதால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது. 

    இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள்பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. வருகிற 23-ந்தேதி வரை மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    சென்னையில் விடிய விடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், நாமக்கல் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



    அதேபோல், வேலூர், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுப்பு அளிக்கப்படுவதாக பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

    கஜா புயல் பாதிப்பால், சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகை கோட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    அதேபோல், திருவாரூரில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #NorthEastMonsoon #ChennaiRain #HeavyRain #Schools #Holiday

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு இழக்க வாய்ப்பு இருப்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #WeatherResearchCenter #Rain
    சென்னை:

    தென் மேற்கு வங்ககடலில் தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டு இருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

    அது தாழ்வு மண்டலமாகவே தமிழக கடலோர மாவட்டங்கள் வழியாக கடந்து உள் மாவட்டங்களுக்கு செல்லும்.

    இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலிலும் உள்மாவட்டங்களிலும், அடுத்த 24 மணி நேரத்துக்கு பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தென் மேற்கு வங்ககடல், மன்னார்வளைகுடா மற்றும் தமிழக கடற்கரை பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் அதிக பட்சம் 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக் கூடும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே இந்தப் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிகப்பட்டுள்ளனர்.


    உள்தமிழகத்தில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்திலும் அதிக பட்சம் 50 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது.



    சென்னையில் நேற்று பிற்பகல் முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. 2-வது நாளாக இன்றும் மழை நீடித்தது. இதனால் இன்று சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இன்று பொது விடுமுறையாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு இழக்க வாய்ப்பு இருப்பதால் நாளை (22-ந்தேதி) முதல் 25-ந்தேதிவரை இந்திய வானிலை மையம் சார்பில் மழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. #WeatherResearchCenter #Rain
    தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி தமிழகத்தை நெருங்குவதால் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #rain #Chennai #WeatherResearchCenter
    சென்னை:

    வங்கக்கடலில் உருவான கஜா புயல் தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை புரட்டி போட்டது. அதன்பாதிப்பில் இருந்து பொதுமக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை.

    இந்தநிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் பகுதியில் நேற்று முன்தினம் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

    இதனால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் சற்று வலுப்பெற்று மேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை (20-ந்தேதி) தமிழகம், புதுச்சேரி கடலோரப்பகுதியில் நிலைகொள்ளக்கூடும். இது புயலாக மாற வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதுமேலும் மேற்கு திசையில் நகர்ந்து நாளை (20-ந்தேதி) தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கடலோர பகுதிகளில் நிலை கொள்ளக்கூடும்.

    இது அடுத்த 24மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இன்று மாலை முதல் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கும். தொடர்ந்து நாளை (20-ந்தேதி) மற்றும் 21-ந்தேதிகளில் படிப்படியாக உள் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும்.

    அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்த வகையில் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மற்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

    எனவே மீனவர்கள் 20,21-ந்தேதிகளில் தமிழக கடற்கரை மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்துக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 20,21-ந்தேதிகளில் இடைவெளிவிட்டு மிதமான மழை பெய்யும்.

    அக்டோபர் 1-ந்தேதி முதல் இன்றுவரை தமிழகம் முழுவதும் 24 செ.மீ மழை பதிவாகி உள்ளது. ஆனால் 30 செ.மீ மழை பெய்திருக்க வேண்டும். இது 20 சதவீதம் குறைவாகும்.

    சென்னையில் இதுவரை 21 செ.மீ மழை பெய்துள்ளது. ஆனால் இந்த காலகட்டத்தில் 53 செ.மீ மழை பெய்திருக்க வேண்டும். இது 60 சதவீதம் குறைவாகும். இன்னும் டிசம்பர் மாதம் வரை மழைபெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #rain #Chennai #WeatherResearchCenter
    தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #rain #Chennai
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கி பெய்து வருகிறது. தற்போது அது வலுவடைந்து இருக்கிறது. இந்த நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  



    மீனவர்கள் நாளை வரை குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. #rain #Chennai
    வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், கடலோர மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #HeavyRain #NorthEastMonsoon
    திருவாரூர்:

    தென்மேற்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி முடிவுக்கு வந்தது. அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் முதல் தெற்கு ஆந்திராவின் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதி வரை காற்றழுத்தம் நிலவி வருகிறது.

    இதே போல் இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இதற்கிடையே வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.



    திருவாரூர், நாகப்பட்டிணம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால், இந்த மூன்று மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #HeavyRain #NorthEastMonsoon #SchoolClosed

    தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #TNRains #IMDChennai
    சென்னை:

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னையைப் பொருத்தவரை கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி எடுத்த நிலையில், நேற்று பரவலாக மழை பெய்தது.

    இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் 21ம் தேதி வரை லேசான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம் மற்றும் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் 7 செமீ மழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் 6 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 5 செமீ மழை பெய்துள்ளது. ஆம்பூர், வேலூர், பெரியகுளம் பகுதியில் தலா 4 செமீ மழை பதிவாகி உள்ளது. #TNRains #IMDChennai
    தமிழகத்தில் இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை 12 சதவீதம் அதிகமாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
    சென்னை:

    தமிழகத்தில் இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை 12 சதவீதம் அதிகமாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.  

    தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் உள்கர்நாடகாவில் முடியும் நிலையில் இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தமிழகத்தில் அனேக இடங்களில் மழைபெய்துள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்றும், வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 12 சதவீதம் அதிகம் பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை குறித்து இந்திய வானிலை துறை முன்னறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில் இந்த ஆண்டில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 12 சதவீதம் அதிகம் பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

    தற்போது இலங்கை முதல் வடகர்நாடகம் வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணத்தால் கடந்த 24 மணி நேரத்தில்(நேற்று முன்தினம்) தென்தமிழகத்தில் அனேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்து இருக்கிறது.

    அடுத்த 2 நாட்களுக்கு (30-ந் தேதி மற்றும் 1-ந் தேதி) தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

    குமரிக்கடல், தெற்கு கடலோர பகுதி, தென்தமிழக கடல் பகுதிகள், கேரளா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளில் சீற்றம் காணப்படும். மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    இதனால் மீனவர்கள் 30-ந் தேதி(இன்று) மாலை வரை மேற்சொன்ன கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. சென்னையை பொறுத்தவரையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை ஆந்திரா மற்றும் தமிழகத்தில் தீவிரம் அடைந்து இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த 2 நாட்களாக பல இடங்களில் மழை பெய்து கொண்டு இருக்கிறது.

    நேற்று முன்தினம் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்து இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகம், புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த காற்றும், இடியுடன் கூடிய மழையும் பெய்வதற்கான வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது.

    சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்வதற்கான சூழல் இருக்கிறது. ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் நேற்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 செ.மீ. மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் 8 செ.மீ. வரை மழை பதிவாகி இருக்கிறது. இது வழக்கத்தை விட 57 சதவீதம் அதிகம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் முக்கியமான இடங்களில் பதிவான மழை அளவு வருமாறு:-

    திருச்சி மாவட்டம் சமய புரத்தில் 17 செ.மீ., காஞ்சீபுரத்தில் 10 செ.மீ., பூந்தமல்லி, உத்திரமேரூரில் தலா 9 செ.மீ., திருவள்ளூர், செங்கம், லால்குடி, திருத்தணியில் தலா 8 செ.மீ., ஆலங்காயம், பூண்டி, கும்பகோணம், வலங்கைமான், கொடுமுடி, சாத்தனூர் அணை, பாபநாசம், திருச்சி விமானநிலையம், திருவண்ணாமலை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தலா 7 செ.மீ., கலவை, செய்யாறு, வால்பாறை, வடசென்னை, தர்மபுரி, முசிறி, நத்தம், மாதவரம், புல்லம்பாடியில் தலா 6 செ.மீ. உள்பட அநேக இடங்களில் மழை பெய்து இருக்கிறது. #tamilnews
    ×