search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • வீட்டை தனது பெயருக்கு பதிவு செய்து தரும்படி முறையிட்டுள்ளார்.
    • வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பக்கிரி ராஜா அருகில் இருந்த உலக்கையை எடுத்து தேவியை தாக்கியுள்ளார்.

    பேரளம்:

    திருவாரூர் மாவட்டம், பேரளம் அடுத்துள்ள கீரனூர் அக்கரைதோப்பு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி தேவி (வயது 45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமமூர்த்தி இறந்து விட்டார்.

    இதனால் தேவி, அவரது மகள்கள் மற்றும் ராமமூர்த்தியின் தகப்பனார் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவரது மூத்த மகளுக்கு திருமணமாகி வெளியூர் சென்றுள்ளார்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பக்கிரி ராஜா (35) என்பவருக்கு வீட்டை விற்பதாக கூறி தேவி பணம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இதனால் வீட்டை காலி செய்யும்படி பக்கிரி ராஜா தேவியிடம் கேட்டுள்ளார்.

    அதோடு மட்டுமின்றி, பக்கிரி ராஜா நேற்று நள்ளிரவு தேவி வீட்டிற்கு சென்று, வீட்டை தனது பெயருக்கு பதிவு செய்து தரும்படி முறையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பக்கிரி ராஜா அருகில் இருந்த உலக்கையை எடுத்து தேவியை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் தேவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டில் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து பேரளம் போலீசில் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பக்கிரி ராஜாவை கைது செய்தனர்.

    நள்ளிரவு பெண்ணை உலக்கையால் தலையில் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுமார் 8 லட்சம் பேர் திரண்டிருந்தனர்.
    • மாநாடு முடிந்து 14 நாட்கள் ஆன நிலையில், இதுவரை அவர் வீடு திரும்பவில்லை.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் கடந்த மாதம் 27ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    இந்த மாநாட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுமார் 8 லட்சம் பேர் திரண்டிருந்தனர்.

    இந்நிலையில், விஜய்யின் தீவிர ரசிகரான திருவாரூர் மாவட்டம் கரையான்காடு பகுதியை சேர்ந்த மேகநாதன் என்கிற இளைஞர் த.வெ.ம மாநாட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.

    ஆனால், மாநாடு முடிந்து 14 நாட்கள் ஆன நிலையில், இதுவரை அவர் வீடு திரும்பவில்லை.

    மேகநாதனுடன் 34 பேர் மாநாட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால், மேகநாதன் மட்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அச்சத்தில் உள்ள மேகநாதனின் தந்தை புஷ்பநாதன், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

    அப்போது, மகனை கண்டுபிடித்து தருமாறு தந்தை போலீசாரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

    • தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • திருவாரூர் பகுதியில் நேற்று வெயிலின் தாக்கம் இன்றி இருண்ட நிலை நிலவியது.

    திருவாரூர்:

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் நேற்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    திருவாரூர் பகுதியில் நேற்று வெயிலின் தாக்கம் இன்றி இருண்ட நிலை நிலவியது. அவ்வப்போது தூறல் மழை பெய்து வந்தது. நேற்று மாலை முதல் அங்கு மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் திருவாரூரில் பள்ளி, கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூரில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    • திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஆண்டுதோறும் இந்த தர்காவில் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடையில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சேக்தாவூது ஆண்டவரின் தர்கா உள்ளது.

    ஆண்டுதோறும் இந்த தர்காவில் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.

    14 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது இந்துக்கள் உள்ளிட்ட மாற்று மதத்தினரும் பங்கேற்பார்கள்.

    இதையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.

    இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிச.7ஆம் தேதி அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சரஸ்வதி தாயார் இங்கு கன்னியாக அமர்ந்து பக்தர்களுக்கு அருளை வழங்கி வருகிறார்.
    • நோட்டு, பேனா, புத்தகம், சிலேட்டு போன்றவற்றை சரஸ்வதி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கூத்தனூரில் கல்வி தெய்வம் சரஸ்வதி தேவிக்கு தனி கோவில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி அம்மனுக்கு என்று இங்கு தான் தனி கோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சரஸ்வதி தாயார் இங்கு கன்னியாக அமர்ந்து பக்தர்களுக்கு அருளை வழங்கி வருகிறார். கருவறையில் வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் வீற்றிருந்து, வலது கீழ் கரத்தில் சின்முத்திரையும், இடது கையில் புத்தகமும், வலது மேல் கரத்தில் அட்சர மாலையும், இடது மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கியிருந்து ஜடா முடியுடன், ஞானச்சஸ் என்கிற மூன்றாவது கண்ணும் கொண்டு, கிழக்கு நோக்கி அருள்பாலித்து வருகிறார்.

    இவ்வாறு சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விழா விமர்சையாக நடைபெறும்.

     

    சரஸ்வதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு வெண்ணாடை உடுத்தி பாத தரிசனம் விழா நடைபெற்றபோது எடுத்தப்படம்.

    சரஸ்வதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு வெண்ணாடை உடுத்தி பாத தரிசனம் விழா நடைபெற்றபோது எடுத்தப்படம்.

    அந்த வகையில் இந்த வருட நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 3-ம் தேதி திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உற்சவம் நடைபெற்று வந்த நிலையில் நேற்று சரஸ்வதி பூஜை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மகா சரஸ்வதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு வெண்ணாடை உடுத்தி பாத தரிசனம் விழா நடைபெற்றது.

    இன்று விழாவின் முக்கிய நிகழ்வாக விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயதசமியை முன்னிட்டு இன்று காலையில் இருந்தே ஏராளமான பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். நோட்டு, பேனா, புத்தகம், சிலேட்டு போன்றவற்றை சரஸ்வதி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்தனர். பின்னர் ஒரு தாம்பாளத்தில் நெல்மணிகளை பரப்பி அதில் தங்களது குழந்தைகளை தமிழ் உயிர் எழுத்தின் முதல் எழுத்தான 'அ' வை எழுத வைத்து வித்யாரம்பம் செய்தனர்.

    முன்னதாக குழந்தைகளின் நாக்கில் மூன்று முறை தேனை தொட்டு வைத்து பின்பு குழந்தைகள் காதுகளில் மந்திரங்களை சொல்லிய பிறகு நெல்மணிகளில் பிள்ளையார் சுழி எழுதி அதற்கு பின்பு தமிழ் உயிர் எழுத்துக்கள் எழுதப்பட்டன.

    இந்த விழாவுக்கு திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • தீட்சிதர்கள் கோவிலில் கிரிக்கெட் விளையாடியதை இளையராஜா என்பவர் வீடியோ எடுத்துள்ளார்.
    • இளையராஜாவின் செல்போனை பறித்து தீட்சிதர்கள் மிரட்டும் வெளியாகி பரபரப்பு

    சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் வளாகத்தில் 10-க்கு மேற்பட்ட தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.

    அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த விசிக நிர்வாகி இளையராஜா (40) தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

    விசிக நிர்வாகி வீடியோ எடுத்ததற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது கோவிலில் கிரிக்கெட் விளையாடலாமா? இது ஆகம விதிக்கு எதிரானது தானே? இதேபோல் அனைவரையும் கிரிக்கெட் விளையாட அனுமதிப்பீர்களா? என கேட்டபோது இது எங்க கோயில் நாங்க எது வேண்டுமானாலும் செய்வோம் அதனை கேட்க நீ யார்? என்று ஒருமையில் தீட்சிதர்கள் பேசியுள்ளனர்.

    பின்னர் அங்கிருந்த தீட்சிதர்கள் இளையராஜாவை அடித்து அவரது செல்போனை பறித்துள்ளனர். இதுகுறித்து இளையராஜா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து தீட்சிதர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இளையராஜாவின் செல்போனை பறித்து அவரை தீட்சிதர்கள் மிரட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது குறித்து பாஜக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜாவிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அவர், "சிதம்பரம் கோயில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறும் இல்லை கோயில் கருவறையில் கிரிக்கெட் விளையாடினால்தான் தவறு" என்று தெரிவித்துள்ளார்.

    சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்களுக்கு ஆதரவாக எச். ராஜா கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை வருகை தந்தார்.
    • தியாகராஜர் மற்றும் கமலாம்பாள் சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    திருவாரூர்:

    திருவாரூரில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை வருகை தந்தார்.

    முன்னதாக அவர் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து, கோவிலில் உள்ள மூலவர் தியாகராஜர் மற்றும் கமலாம்பாள் சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை காண்பித்தனர். பின்னர், அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து, அவர் கோவிலை பிரதட்சனம் செய்து அங்குள்ள பிற சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார். அப்போது பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • காலநிலை மாற்றத்தால் பெரும் அழிவை சந்திப்பது விவசாயமாகும்.
    • காப்பீட்டு நிறுவனங்கள் வணிக நோக்கோடு செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மன்னார்குடி:

    தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் இன்று மன்னார்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் பெரும் அழிவை சந்திப்பது விவசாயமாகும். இந்தியாவிலேயே தமிழ்நாடு மாநிலம் மட்டுமே தென்மேற்கு மற்றும் வடகிழக்கு இருபருவ மழைகள் பருவம் மாறி பெய்வதால் விவசாயம் பேரழிவை சந்திக்கிறது.

    எனவே பேரிடர் பாதிப்பில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கோடும், மத்திய அரசு உற்பத்தியிலும் இழப்பிலும் பங்கேற்கும் அடிப்படைக் கொள்கையோடு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    கடந்த 2018 -ம் ஆண்டு முதல் மேம்படுத்தப்பட்ட பிரதமர் காப்பீடு திட்டம் என்கிற பெயரில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களின் அடிப்படையில் 20 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு வணிக நோக்கோடு செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வணிக நோக்கோடு மத்திய மாநில அரசுகளின் பிரிமிய தொகை பங்கிட்டுக் கொள்ளும் நிலை உள்ளது.

    இதிலிருந்து பாதுகாப்பதற்கு மத்திய அரசு விரைந்து வழிகாட்டு முறைகளில் மாற்றம் கொண்டு வந்து பேரிடரால் பாதிக்கப்படும் விவசாயிகள் நலனை முன்னிறுத்தி காப்பீட்டு திட்டம் செயல்படுத்துவதை உறுதிப்படுத்திட வலியுறுத்தி மத்திய அரசின் காப்பீட்டு நிறுவன தலைவர் ரித்திஷ் சவுகானுக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

    தமிழ்நாட்டில் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கான உண்மைக்கு புறம்பான வகையில் காப்பீடு இழப்பீடு நிர்ணயம் செய்துள்ள மத்திய அரசின் அரசாணையை ரத்து செய்திட வேண்டும்.

    மாவட்ட கலெக்டர் தலைமையிலான பேரிடர் மேலாண்மை குழு மூலம் மழை அளவை கணக்கில் கொண்டும், மேட்டூர் அணையின் நீர்ப்பாசன அளவை கவனத்தில் கொண்டும் இழப்பை மறு ஆய்வு செய்து உண்மையான மகசூல் இழப்பிற்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்து புதிய அரசாணை வெளியிட வேண்டும்.

    காவிரி டெல்டாவில் மேட்டூர் அணை வறண்டதால் 2023 ஆகஸ்ட் 7-ந் தேதியே அணை மூடப்பட்டதாலும், வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாகப் பெய்ததால் சம்பா சாகுபடி முற்றிலும் அழிந்த நிலையில் காப்பீட்டிற்கான இழப்பீட்டை நிபந்தனையின்றி 100 சதவீதமும் உடன் வழங்கிட வேண்டும்.

    அறுவடை ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் ஆண்டுதோறும் மகசூல் இழப்பிற்கு ஏற்ப காப்பீட்டுக்கான இழப்பீடு வழங்கும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளுக்கான தற்போதைய உத்தேச மகசூல் அளவை கணக்கில் கொள்வதை கைவிட வேண்டும்.

    தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் மட்டுமே காப்பீடு செய்வதை கட்டாயமாக்கிட வேண்டும். தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதிப்பதை கொள்கை ரீதியாக கைவிட முன்வர வேண்டும்.

    அரசு நிரந்தர வேளாண் பணியாளர்களை நியமனம் செய்து வெளிப்படை தன்மையுடன் அறுவடை ஆய்வு அறிக்கை செய்திட வேண்டும்.

    அவ்வாறு மேற்கொள்ளும் ஆய்வு அறிக்கையின் இறுதி பட்டியலை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான பேரிடர் மேலாண்மை குழுவிற்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெற்று இறுதி படுத்திடும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

    இந்நிலையில் பிரதமரை நாளை (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் சந்திக்க உள்ள நிலையில் காப்பீட்டுக்கான இழப்பீடு முழுமையாக வழங்குவதற்கும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு குறித்தான அரசாணையை ரத்து செய்திடவும் வலியுறுத்த வேண்டும்.

    மேலும் காவிரியின் குறுக்கே தமிழ்நாடு ராசிமணலில் அணை கட்டி கடலில் உபரிநீர் தடுப்பதை தடுத்து நிறுத்துவதற்கு பிரதமரிடம் அனுமதி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன.
    • மதுவை உற்பத்தி செய்கின்ற முதலாளிகளை எதிர்க்கின்ற செயலாகும்.

    திருவாரூர்:

    மது போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு குறித்த விளக்க மண்டல செயற்குழு கூட்டம் திருவாரூரில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    மது ஒழிப்பு என்கிற உணர்வு பூர்வமான பிரச்சனையை கையில் எடுத்துள்ளேன். அனைத்து கட்சிகளும் மதுவேண்டாம், மதுவிலக்கு வேண்டும் என்பார்கள், ஆனால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மாட்டார்கள். இதனால் தான் இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன. இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து மதுவிலக்கு என்ற முடிவு எடுத்தால் நிச்சயம் மதுவை ஒழிக்க முடியும் மது என்பது மிகப்பெரிய லாபம் தரும் தொழில், மிகப்பெரிய கட்டமைப்பினை கொண்டது. மதுக்கடைகளை மூடுவது என்பதை விட மது ஆலைகளை மூட வேண்டும்.

    டாஸ்மாக் கடையை மூடுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. டாஸ்மாக் என்பது கார்பரேசன் தமிழ்நாடு அரசே உருவாக்கி உள்ளது. இதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பெரிய தொழில் அதிபர்களுடன் முரண்படுகின்ற விசயம். மதுவை உற்பத்தி செய்கின்ற முதலாளிகளை எதிர்க்கின்ற செயலாகும். இது குறித்து தொடக்கத்தில் இருந்து பேசி வருகிறேன்.

    நாங்கள் மது ஒழிப்பு குறித்து பேசுவதால் தற்போது தி.மு.க. கூட்டணியை சிலர் உடைக்க நினைத்து பேசி வருகின்றனர். தேர்தலில் அரசியல் வேறு, மதுவிலக்கு கொள்கை வேறு என்று கூறுகிறோம். மதுவிலக்கு குறித்து தி.மு.க., அ.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் என அனைவரும் கூறுகிறோம். தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கு என்பது மட்டுமல்ல, தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வந்தால் பயன் அளிக்கும்.

    தூய்மையான நோக்கத்துக்கு தேர்தல் அரசியல் முடிச்சு போட வேண்டாம். மது ஒழிப்பு கொள்கையால் அரசியலில் எந்த பாதிப்பு வந்தாலும் சந்திக்க தயார். கூட்டணி உறவில் பாதிப்பு வந்தாலும் வரலாம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். இப்போது நாங்கள் தி.மு.க கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணியில் தொடர்கிறோம், தொடரும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது.
    • சென்னை மாநகராட்சியை கண்டித்து வருகிற 28-ந்தேதி போராட்டம் நடத்த உள்ளோம்.

    திருவாரூர்:

    திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சுதந்திர தினத்தன்று கவர்னர் மாளிகையில் நடந்த தேனீர் விருந்தில் தி.மு.க. பங்கேற்றது குறித்து அரசு தான் பதில் சொல்ல வேண்டும். எங்களை பொறுத்த அளவு தி.மு.க. தேனீர் விருந்தில் பங்கேற்காது என்று தான் கூறினார்கள். தி.மு.க. அரசும், கவர்னரும் தொடர்ந்து முரண்பாட்டுடன் இருக்க வேண்டாம் என்பதற்காக தேனீர் விருந்தில் கலந்து கொண்டதாக கூறுகிறார்கள்.

    கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசிடம் கேட்டதற்கு உடனடியாக ஒத்துக் கொண்டார்கள். அதே வேளையில், தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது.

    சொத்து வரி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சியை கண்டித்து வருகிற 28-ந்தேதி போராட்டம் நடத்த உள்ளோம்.

    பாஜக.வுடன் யார் கூட்டணியில் சென்றாலும் அவர்களை எதிர்க்கிற கூட்டணியில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவாரூர் நீடாமங்கலம் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி பிடிபட்டான்.
    • ரவுடி நிர்மல்ராஜை உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் சுட்டுப்பிடித்துள்ளார்.

    திருவாரூர் நீடாமங்கலம் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

    காவலரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்றபோது ரவுடி நிர்மல்ராஜை உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் சுட்டுப்பிடித்துள்ளார்.

    போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் காலில் காயமடைந்த ரவுடி மனோ நிர்மல்ராஜ்க்கு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • சக்தி என்கிற மாணவர் படுத்த படுக்கையிலேயே உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
    • திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்த மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சக்தி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 4ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார்.

    இந்நிலையில், கல்லூரி விடுதியின் உள்ளே அறையில் நள்ளிரவு படித்துவிட்டு உறங்கிய மாணவர் காலையில் அறையை திறக்காததால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    பிறகு, சக மாணவர்கள் அறையை திறந்து பார்த்தபோது, சக்தி என்கிற மாணவர் படுத்த படுக்கையிலேயே உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து, மாணவர் சக்தியின் உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மாணவர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தாரா ? அல்லது இது தற்கொலையா என்பது குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×