search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "work study"

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி தொடரப்பட்ட வழக்கை வருகிற ஜூன் 11-ந்தேதிக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiSterlite

    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் நோய் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டம், கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந்தேதி கலவரமாக வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இதையடுத்து அந்த ஆலைக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு மே 28-ந் தேதி ‘சீல்’ வைத்து இழுத்து மூடியது. குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகளை துண்டித்தது.

    இதை எதிர்த்தும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ஓய்வுப் பெற்ற நீதிபதியை கொண்டு ஆய்வு செய்து அறிக்கையை பெற்றது. பின்னர், ஆலையை திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

     


    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதையடுத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவை ரத்து செய்தும், ஸ்டெர்லைட் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டை அணுகும்படியும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி, சென்னை ஐகோர்ட்டில் ஸ்டெர்லைட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன், இந்த வழக்கில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் மூத்த வக்கீல் ஆரியமா சுந்தரம் உள்பட பலர் ஆஜராகிவாதிட்டனர்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘ஏற்கனவே இந்த வழக்கில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில், மத்திய வனத்துறை அமைச்சகம், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றையும் உறுப்பினர்களாக சேர்க்கின்றோம்.

    மேலும், இந்த வழக்கில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் 40 இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை எல்லாம் விசாரணைக்கு ஏற்பது குறித்து முடிவு செய்த பின்னரே, பிரதான வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியும். எனவே, இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 11-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

    இதையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘ஆலையை மூடி ஓர் ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அங்கு பணியாற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க வில்லை.

    இதைதொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்ய ஒரு தனிக்குழுவை அமைக்க வேண்டும் என்று மூத்த வக்கீல் மற்றொரு கோரிக்கையை விடுத்தார். ஆனால், இந்த வழக்கை பொருத்தவரை எந்த ஒரு புதிய உத்தரவையும் தற்போது பிறப்பிக்க முடியாது’ என்று நீதிபதிகள் கூறினர். #ThoothukudiSterlite

    ×