search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World tallest statue"

    உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தி நகரில் கட்டப்படவுள்ள பிரமாண்டமான கோவிலில் ராமருக்கு 221 மீட்டர் உயரத்தில் உலகின் மிக உயரமான வெண்கலச் சிலை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. #Worldstalleststatue #LordRam #Ayodhya
    லக்னோ:

    ராமரின் ஜென்மபூமியாக கருதப்படும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகள் முன்பு எப்போதுமில்லாத வகையில் முனைப்பு காட்டி வருகின்றன. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பு வரும்வரை காத்திருக்க முடியாது. இந்து மக்கள் பொறுமையிழந்து, கொந்தளிக்க தொடங்கி விட்டனர்.

    எனவே, அவசர சட்டத்தின் மூலம் ராமர் கோவிலை கட்டுவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை அதிகரித்து வருகிறது. இதே கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசை பணிய வைப்பதற்காக அயோத்தி நகரில் இன்று ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றுள்ள ‘தர்மசபா’ ஆலோசனை கூட்டம் தொடங்கி, நடைபெற்று வருகிறது.



    இதற்கிடையில், அயோத்தி நகரில் உத்தரப்பிரதேசம் மாநில அரசால் கட்டப்படவுள்ள பிரமாண்டமான கோவிலில் ராமருக்கு 221 மீட்டர் உயரத்தில் வெண்கலச் சிலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    ராமர் கோவில் கட்டுவதற்காக 5 பிரபல கட்டுமான நிறுவனங்கள் வெளியிட்டுள்ள திட்ட அறிக்கையை
    முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் நேற்று இறுதி செய்துள்ளதாக அம்மாநில கூடுதல் தலைமை (தகவல் ஒலிபரப்புத்துறை ) செயலாளர் அவ்னிஷ் அஸ்வதி இன்று தெரிவித்துள்ளார்.

    இந்த திட்டத்தின்படி, ராமர் கோவில் கட்டும் இடத்தில் சரயு நதிக்கரையில் சிலை எழுப்பும் பீடத்தின் உயரம் 50 மீட்டர்களாக இருக்கும். ராமரின் வெண்கலச் சிலை 151 மீட்டர், மற்றும் தலைக்குமேல் இருக்கும் வெண்கொற்றக் குடை 20 மீட்டர் உயரத்திலும் இந்த சிலை அமையும்.

    மேலும், ராமர் கோவில் அருகில் ராமாயணத்துடன் தொடர்புடைய மன்னர்களின் வரலாற்று அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இதில் மனு என்ற மன்னரில் தொடங்கி அயோத்தி நகரின் முழு வரலாறும் சித்தரிக்கப்படும். விஷ்ணுவின் அவதாரங்களும் அதற்கான காரண விளக்கமும் இங்கு சித்திர வடிவில் சித்தரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். #Worldstalleststatue #LordRam #Ayodhya

    உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் 2 பேர் கலந்து கொள்கிறார்கள். #SardalPatel #PMModi #Inaugurate
    ஆமதாபாத்:

    ‘இரும்பு மனிதர்‘ என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது.

    சர்தார் வல்லபாய் படேல், நாட்டை ஒன்றுபடுத்தியதை குறிப்பிடும்வகையில், ‘ஒற்றுமை சிலை’ என்று இது அழைக்கப்படுகிறது.

    இதன் உயரம் 182 மீட்டர். உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட 2 மடங்கு உயரம் கொண்டது.

    இந்த சிலையை உருவாக்க 70 ஆயிரம் டன் சிமெண்ட், ஆயிரக்கணக்கான டன் எக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. சிலையின் வெளிப்புற பூச்சுக்காக 1,700 டன் வெண்கலம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

    சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சிலையை அவர் திறந்து வைத்தவுடன், இந்திய விமானப்படைக்கு சொந்தமான 3 விமானங்கள் வானில் பறந்து சென்று, தேசிய கொடியில் உள்ள 3 வண்ணங்களில் பொடிகளை தூவி, வானில் தேசிய கொடியை உருவாக்கும்.

    நாட்டின் ஒற்றுமையை குறிக்கும்வகையில், சிலை அருகே உருவாக்கப்பட்டு உள்ள ஒற்றுமை சுவரையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அப்போது, 3 போர் விமானங்கள், அந்த சுவருக்கு மேலே தாழ்வாக பறந்து செல்லும்.

    பின்னர், படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். அப்போது, மி-17 ரகத்தை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் வானில் இருந்து படேல் சிலை மீது மலர்களை தூவும்.

    சிலை திறப்பை முன்னிட்டு, குஜராத் காவல்துறை, ஆயுதப்படை மற்றும் துணை ராணுவப்படைகளைச் சேர்ந்த பாண்டு வாத்திய குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும். 29 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட கலைஞர்களின் நடன, இசை நிகழ்ச்கிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சிலை திறப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் காண வசதியாக, 135 மீட்டர் உயரத்தில் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து சர்தார் சரோவர் அணையையும், அதைச் சுற்றி உள்ள மலைகளையும் பார்த்து ரசிக்கலாம்.

    இந்த நிகழ்ச்சியில், தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி, செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதற்காக இருவரும் நேற்று மாலை 4.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, படேல் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு நர்மதா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த சிலை உருவாக்கும் திட்டத்தால், இயற்கை வளங்கள் பேரழிவை சந்திக்கும் என்பதால், திறப்பு விழாவை புறக்கணிப்பதாக பிரதமர் மோடிக்கு 22 கிராமங்களின் தலைவர்கள் கூட்டாக கடிதம் எழுதி உள்ளனர்.

    விழாவுக்கு வரும் மோடியை வரவேற்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.
    ×