search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yemen rebels"

    இஸ்லாமியர்களின் புனித பூமியான மெக்கா நகரின் மீது ஈரானின் ஆதரவு பெற்ற ஏமன் நாட்டு ஹவுத்தி போராளிகள் இன்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது.
    ரியாத்:

    ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹவுத்தி போராளிகளுக்கு ஈரான் அரசு தொடர்ந்து ஆதரவு அளிப்பதுடன் மறைமுகமாக ஆயுதங்களையும் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏமன் அரசின் ஆட்சி நாடுகடந்த அரசாக அருகாமையில் உள்ள சவுதி அரேபியாவில் இருந்து இயங்கி வருகிறது.

    இந்நிலையில், ஈரானின் ஆதரவு பெற்ற ஏமன் நாட்டு ஹவுத்தி போராளிகள் இஸ்லாமியர்களின் புனித பூமியான மெக்கா நகரின் மீது இன்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

    2015-ம் ஆண்டுக்கு பின்னர் மெக்கா நகரை குறிவைத்து ஹவுத்தி போராளிகள் நடத்திய மூன்றாவது தாக்குதல் இது என சவுதி ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

    சவுதியில் இருந்து ஆட்சி நடத்திவரும் நாடுகடந்த ஏமன் அரசின் தகவல் தொடர்புத்துறை மந்திரி முவம்மர் அல்-இர்யானி, ஈரான் அரசின் உத்தரவின்படி மெக்கா நகரத்தின்மீது ஹவுத்தி போராளிகள் இன்று இரண்டு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் அந்த ஏவுகணைகளை கூட்டுப்படைகளின் ஏவுகணைகள் வழிமறித்து சுட்டு வீழ்த்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், சவுதி அரேபியாவின் நஜ்ரான் மாவட்டத்தில் உள்ள ராணுவ ஆயுத கிடங்கின்மீது வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் மூலம் ஹவுத்தி போராளிகள் இன்று தாக்குதல் நடத்தியதாகவும் அதில் ஆயுத கிடங்கு நாசமானதாகவும் அவர் தெரிவித்தார்.



    ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ஏமனில் உள்ள ஹவுத்தி போராளி குழு தலைவர்கள் மறுத்துள்ளனர். இதுபோன்றதொரு தாக்குதல் நடத்தி இருந்தால் அதற்கு நாங்கள் நிச்சயமாக பொறுப்பேற்றுக் கொள்வோம். இதில் அச்சப்பட ஏதுமில்லை. ஆனால், இந்த தாக்குதல்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

    சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான பெட்ரோல் குழாய்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் குண்டுகளை வீசி ஹவுத்தி போராளிகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தியதால் கச்சா எண்ணெய் வினியோகம் தற்காலிகமாக சீர்குலைந்தது.

    இதற்கிடையில், வளகுடா நாடுகளின் ஒத்துழைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள அரபு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இரண்டு மாநாடுகளை அடுத்த வாரம் மெக்கா நகரில் நடத்த சவுதி அரசு ஏற்பாடு செய்துள்ள நிலையில் இன்று மெக்காவின் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    ×