search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ட்விட்டரில் வாக்குவாதம் செய்த பொறியாளர் - உடனே Fire செய்து ட்விட்-ஐ டெலீட் செய்த எலான் மஸ்க்!
    X

    ட்விட்டரில் வாக்குவாதம் செய்த பொறியாளர் - உடனே "Fire" செய்து ட்விட்-ஐ டெலீட் செய்த எலான் மஸ்க்!

    • எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்லாயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
    • மேலும் ட்விட்டர் தளத்தில் ஏராளமான மாற்றங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைவர் எலான் மஸ்க் தனது ஊழியர்கள் தன்னை கேள்வி எழுப்புவதை விரும்பவில்லை என்பது வெளிப்படையாக அம்பலமாகி இருக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து ஏராளமானோர் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். எனினும், பொறியாளராக பணியாற்றி எரிக் ஃபிரான்ஹோஃபர்-ஐ மட்டும் எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தில் வைத்து பணிநீக்கம் செய்து இருக்கிறார்.

    பொது வெளியில் எலான் மஸ்க்-இடம் வாக்குவாதம் செய்த காரணத்தால் எரிக் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். ட்விட்டரில் வாக்குவாதம் செய்த எரிக் பணிநீக்கம் செய்யப்பட்டதாக, எலான் மஸ்க் ட்விட்டரிலேயே தெரிவித்து இருந்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆனது. பொறியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக எலான் மஸ்க் பதிவிட்ட ட்விட்-ஐ அவர் அழித்து விட்டார்.

    "பெரும்பாலான நாடுகளில் ட்விட்டர் மிக மோசமாக செயல்படுவதற்கு மன்னிக்கவும். செயலி மிக மோசமாக பேட்ச் செய்யப்பட்ட 1000-க்கும் மேற்பட்ட RPC-க்களால் ஹோம் டைம்லைனை ரெண்டர் செய்ய இயலவில்லை" என எலான் மஸ்க் ட்விட் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த எரிக், "நான் ஆறு ஆண்டுகளாக ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் பணியாற்றி வருகிறேன், இது பொய் என்பதை என்னால் கூற முடியும்." என பதில் அளித்து இருந்தார்.

    இதைத் தொடர்ந்து எலான் மஸ்க் மற்றும் எரிக் இடையே ட்விட்டரில் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இடையே பொது மக்களும் எலான் மஸ்க் உடன் இணைந்து எரிக் பொது வெளியில் வாக்குவாதம் செய்வது தவறு என கருத்து தெரிவித்தனர். இது தொடர்பான வாக்குவாதத்தில் எலான் மஸ்க் அளித்த பதில் ஒன்றில் எரிக் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

    தான் பணிநீக்கம் செய்யப்பட்டதை எலான் மஸ்க் பதிவிட்ட ட்விட் மூலம் அறிந்து கொண்ட எரிக், அதற்கு சல்யுட் அடிக்கும் எமோஜியை பதிலாக பதிவிட்டார். 41 வயதான எரிக் கடந்த எட்டு ஆண்டுகளாக ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பின் இது பற்றி ஃபோர்ப்ஸ்-க்கு எரிக் பேட்டி அளித்து இருக்கிறார். அதில், "எனது லேப்டாப் ஷட் ஆஃப் ஆகி விட்டது தற்போது, அதனை என்னால் இயக்க முடியவில்லை." என்று தெரிவித்து இருக்கிறார்.

    "நிறுவனத்திற்குள் யாரும் யாரையும் நம்புவதில்லை. எப்படி உங்களால் செயலாற்ற முடியும்? ஊழியர்கள் புதிய நிர்வாகத்தை நம்பவில்லை. நிர்வாகமும் ஊழியர்களை நம்பவில்லை. இந்த சூழலில் எப்படி வேலை பார்க்க முடியும்? இதன் காரணமாக தான் ப்ரோடக்‌ஷன் தடைபடுகிறது, துணை தலைவர்களின் அனுமதி இன்றி பணியை மேற்கொள்ள முடியாது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    Next Story
    ×