என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
ட்விட்டரில் பேமண்ட் மற்றும் என்க்ரிப்ஷன் வசதி - எலான் மஸ்க் அதிரடி!
- எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து ஏராளமான மாற்றங்கள் தளத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- மேலும் பல ஆயிரம் பேர் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க், தனது சமூக வலைதளத்தில் புதிதாக இணைவோர் (சைன்-அப்) எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். நவம்பர் 16 ஆம் தேதியில் இருந்து கடந்த ஏழு நாட்களில் மட்டும் தினந்தோரும் சுமார் இருபது லட்சத்திற்கும் அதிகமானோர் ட்விட்டரில் சைன் அப் செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது கடந்த ஆண்டு இதே வாரத்துடன் ஒப்பிடும் போது 66 சதவீதம் அதிகம் ஆகும். மேலும் பயனர் தளத்தில் செலவிடும் நேரம் வரலாறு காணாத வகையில் அதிகரித்து இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஏழு நாட்களில் பயனர் தளத்தில் செலவிடும் நேரம் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 8 பில்லியன் நிமிடங்கள் ஆகும். இது கடந்த ஆண்டு இதே வாரத்தை விட 30 சதவீதம் அதிகம் ஆகும்.
ட்விட்டரில் இருந்து வந்த வேற்றுமை கருத்துக்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை விட இந்த ஆண்டு நவம்பர் மாதம் பெருமளவு சரிவடைந்து இருக்கிறது. ட்விட்டரை வாங்குவதன் மூலம், தனது நீண்ட நாள் கனவு- எல்லாவற்றுக்குமான செயலியான X உருவாக்கும் இலக்கை வேகப்படுத்தும் என எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார்.
எலான் மஸ்கின் "ட்விட்டர் 2.0 தி எவ்ரிதிங் ஆப்" என்க்ரிப்ட் செய்யப்பட்ட டைரக்ட் மெசேஜ்கள், நீண்ட வடிவம் கொண்ட ட்விட்கள் மற்றும் பேமண்ட் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அடுத்த 12 முதல் 18 மாதங்களில் ட்விட்டர் மாதாந்திர பயனர் எண்ணிக்கை பில்லியனை தாண்டும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.