search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    அந்தர்பல்டி அடித்த ஒபன்ஏஐ - சென்ற வேகத்தில் மீண்டும் சி.இ.ஓ.-வாக திரும்பிய சாம் ஆல்ட்மேன்
    X

    அந்தர்பல்டி அடித்த ஒபன்ஏஐ - சென்ற வேகத்தில் மீண்டும் சி.இ.ஓ.-வாக திரும்பிய சாம் ஆல்ட்மேன்

    • டெக் உலக முன்னணி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
    • கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடைபெற்றதாக தகவல்.

    உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நிறுவனமான ஒபன்ஏஐ, கடந்த வெள்ளிக் கிழமை (நவம்பர் 17) அதன் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேனை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. ஒபன்ஏஐ நிர்வாக குழுவின் இந்த முடிவு டெக் உலகையே அதிர்ச்சி அடைய செய்தது.

    ஒபன்ஏஐ நிறுவனத்தின் பணிநீக்க அறிவிப்புக்கு டெக் உலக முன்னணி தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையே பணிநீக்க நடவடிக்கை குறித்து கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடைபெற்று வந்துள்ளதாக தெரிகிறது.

    அந்த வகையில், கடந்த ஞாயிற்று கிழமை வரையிலும் நிர்வாக குழு ஆல்ட்மேனை பணிநீக்கம் செய்த நடவடிக்கையில் உறுதியாகவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா, சாம் ஆல்ட்மேனை தனது நிறுவனத்திற்கு வரவேற்க தயாராக இருப்பதாக கருத்து தெரிவித்து இருந்தார்.

    இதுதவிர ஒபன்ஏஐ நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் சாம் ஆல்ட்மேனுக்கு நெருங்கிய உயர் அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் என சுமார் 700-க்கும் மேற்பட்டோர் நிர்வாக குழுவின் பணிநீக்க நடவடிக்கையை எதிர்த்து கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.

    அதில், சாம் ஆல்ட்மேனின் பணிநீக்க நடவடிக்கையை திரும்ப பெறாவிட்டால், அனைவரும் சாம் ஆல்ட்மேனுடன் வெளியேற தயாராக இருப்பதாக தெரிவித்து கையொப்பமிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், சாம் ஆல்ட்மேனை மீண்டும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்க நிர்வாக குழு ஒப்புக்கொள்வதாக நேற்று (நவம்பர் 21) தகவல்கள் வெளியாகின.

    "பிரெட் டெய்லர், லேரி சம்மர்ஸ் மற்றும் ஆடம் டி ஏஞ்சலோ ஆகியோர் அடங்கிய நிர்வாக குழு ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக திரும்புவதற்கான ஒப்பந்தத்தை எட்டியிருக்கிறோம். இது தொடர்பான விவரங்களை சேகரிக்க இருக்கிறோம். இந்த விவகாரத்தில் இதுவரை அமைதி காத்தமைக்கு நன்றிகள்," என ஒபன்ஏஐ நிறுவனம் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

    "நான் ஒபன்ஏஐ-ஐ விரும்புகிறேன். இந்த குழு மற்றும் அதன் குறிக்கோளை ஒன்றாக வைத்துக் கொள்ள கடந்த சில நாட்களில் அனைத்தையும் செய்தேன். புதிய நிர்வாக குழு மற்றும் சத்யாவின் ஆதரவுடன், நான் ஒபன்ஏஐ-க்கு திரும்புவதில் ஆவலாக இருக்கிறேன். இத்துடன் மைக்ரோசாப்ட் உடன் பலமான கூட்டணியை உருவாக்க விரும்புகிறேன்," என்று சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    ஒபன்ஏஐ தலைமை செயல் அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டதும், அதன் புதிய தலைமை செயல் அதிகாரியாக ட்விட்ச் நிறுவனர் எம்மெட் ஷியர் நியமிக்கப்பட்டார். தற்போது, ஒபன்ஏஐ தனது பழைய தலைமை செயல் அதிகாரியை மீண்டும் அழைத்துக் கொண்டிருப்பதால், எம்மெட் ஷியர் நியமிக்கப்பட்டது குறித்து ஒபன்ஏஐ சார்பில் இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.

    Next Story
    ×