என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
ஜனவரி 1 முதல் இந்த ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில் வாட்ஸ்அப் செயல்படாது
- ஏராளமான புது அம்சங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
- பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.
உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் தகவல் பரிமாற்றம் சார்ந்து ஏராளமான புது அம்சங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒருபக்கம் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மறுப்பக்கம் வாட்ஸ்அப் செயலி பழைய சாதனங்களில் இயங்கும் வசதி குறைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஆண்ட்ராய்டு கிட்கேட் அல்லது அதற்கும் பழைய ஓ.எஸ். கொண்ட ஸ்மார்ட்போன்களில் வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற சேவைகளை பயனர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மெட்டா மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் அங்கமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும், இந்த நடவடிக்கை செயலியின் பாதுகாப்பு மற்றும் சீரான இயக்கத்தை உறுதிப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 2013ம் ஆண்டு வெளியான ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓஎஸ் மிகவும் பழையது என்பதால், வாட்ஸ்அப்-இன் புதிய அம்சங்களை அதில் வழங்குவதில் நிறைய சிக்கல்கள் ஏற்படும். இதோடு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.
வாட்ஸ்அப் சேவை நிறுத்தம் காரணமாக சாம்சங், எல்.ஜி. மற்றும் சோனி என பல ஸ்மார்ட்போன் பிரான்டுகளின் பழைய மாடல்களை பயன்படுத்துவோர் பாதிக்கப்படுவர். எனினும், எந்தெந்த மாடல்களுக்கு வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்பது குறித்த பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை.