search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால் முதல் சுற்றில் வெற்றி: ரடுகானு- ஜெலீனா அதிர்ச்சி தோல்வி
    X

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால் முதல் சுற்றில் வெற்றி: ரடுகானு- ஜெலீனா அதிர்ச்சி தோல்வி

    • நடால் 2-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னினியை சந்திக்கிறார்.
    • எம்மா ரடுகானு முதல் சுற்றிலேயே தோற்று அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் இரண்டாம் நிலை வீரரும், 22 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற சாதனையாளருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிங்கி ஹிஜிகடாவை எதிர்கொண்டார்.

    'வைல்டு கார்டு' வீரரான ரிங்கி முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்று அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் பின்னர் நடால் சுதாரித்து விளையாடி தொடர்ந்து 3 செட்களையும் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 4-6, 6-2, 6-3, 6-3

    நடால் 2-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னினியை சந்திக்கிறார்.

    செபாஸ்டியனுக்கு (அர்ஜென்டினா) எதிரான ஆட்டத்தில் 3-வது வரிசை யில் உள்ள கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 7-5, 7-5, 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.அப்போது செபாஸ்டியன் காயத்தால் வெளியேறினார். இதனால் அல்காரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    மற்ற ஆட்டங்களில் ஜான் இஸ்னெர் (அமெரிக்கா), சின்னெர் (இத்தாலி), டிமிட்ரோவ் (பல்கேரியா) போன்ற முன்னணி வீரர்கள் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 8-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) தொடக்க சுற்றில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த கோல் பிக்கை எதிர்கொண்டார்.

    இதில் பெகுலா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் ஸ்டெப் ஹென்ஸ் (அமெரிக்கா), யுலியா புதின் சேவா (ரஷியா) ஜூலி நெய்மா (ஜெர்மனி) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    11-வது வரிசையில் உள்ள எம்மா ரடுகானு (இங்கிலாந்து), முதல் சுற்றிலேயே தோற்று அதிர்ச்சிகரமாக வெளியேறினார். பிரான்சை சேர்ந்த அலிசியா தோர்னெட் 6-3, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ரடுகானுவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதே போல 16-வது வரிசையில் உள்ள ஜெலீனா ஒஸ்டாபென்கோ (லாத்வியா), 24-ம் நிலை வீராங்கனையான அமண்டா அனிஷ்மோவா (அமெரிக்கா), 25-வது வரிசையில் உள்ள எலீனா ரைபகினா (கஜகஸ்தான்), 32-வது இடத்தில் இருக்கும் மெர்டன்ஸ் (பெல்ஜியம்) ஆகியோரும் முதல் சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.

    Next Story
    ×