search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    இடதுகாலை தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கும் இருக்கன்குடி மாரியம்மன்
    X

    இடதுகாலை தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கும் இருக்கன்குடி மாரியம்மன்

    • பாதுகாக்கும் குல தெய்வமாக மாரியம்மன் திகழ்கிறாள்.
    • அர்த்த மண்டபம் மற்றும் மகாமண்டபம் கருவறைக்கு அருகில் அமைந்துள்ளன.

    அம்மன் கோவில்களில் வழக்கமாக மாரியம்மன், இடது காலை மடித்து, வலது காலைத் தொங்கவிட்டபடிதான் இருப்பாள். ஆனால் இந்த கோவிலில் இருக்கும் கருவறை மாரியம்மனோ, சிறப்பம்சமாக வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டிருக்கிறார்.

    கருவறை அழகிய விமானத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் நுழைவு வாசலின் உயரம் குறைவாக இருப்பதால் குனிந்து உள்ளே போக வேண்டும். அம்மன் ஆபரணங்கள் அணிந்து மின்னுகிறாள். அம்மனின் கண்கள் காண்பதற்கே மெய் சிலிர்க்கும்.

    அர்த்த மண்டபம் மற்றும் மகாமண்டபம் கருவறைக்கு அருகில் அமைந்துள்ளன. நந்தீஸ்வரர் மற்றும் கொடிமரம் மகாமண்டபத்தின் முன்புறம் அமைந்துள்ளன.

    கருவறையின் தென்புறம் அரச மரத்தடியில் சித்திவிநாயகர் சன்னதியும் மற்றும் வடக்குவாய் செல்லியம்மன், ஸ்ரீ வெயிலுகந்தம்மன் சன்னதிகளும் அமைந்துள்ளன.

    கருவறையின் வடக்குப் பகுதியில் பைரவர், வீரபத்திரர், பேச்சியம்மன், காத்தவராயர் சன்னதிகள் அமைந்துள்ளன. வெளிப் பிரகாரத்தின் தென் கிழக்கு பகுதியில் கருப்பசாமி சன்னதி அமைந்துள்ளது.

    மூன்று நாட்கள் ஊருக்குள் இருந்து விட்டு கோவில் உள்ள இடத்திற்கு மீண்டும் அம்மன் கொண்டுவரப்பட்டதால் அம்மனின் உற்சவர் சிலை, ஒவ்வொரு ஆடிமாதமும் கடைசி வெள்ளியன்று ஊரில் உள்ள கோவிலில் எழுந்தருளி, மூலவர் உள்ள இடத்திற்கு வந்து தங்கவைக்கப்படுகிறது. மறுநாள் இங்கிருந்து புறப்பட்டு ஊருக்குள் உள்ள உற்சவர் கோவிலை அடைகிறது.

    கோவில் தனிச்சிறப்புகள்

    இருக்கன்குடிக்கு மட்டுமின்றி அதை சுற்றியுள்ள நத்தத்துப்பட்டி, என்.மேட்டுப்பட்டி, கே.மேட்டுப்பட்டி உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்து மக்களுக்கும் இப்பகுதியில் இருந்து பிழைப்பு தேடி வெளியூர் சென்று குடியேறிய மக்களுக்கும் அருள்கடாட்சம் தந்து பாதுகாக்கும் குல தெய்வமாக மாரியம்மன் திகழ்கிறாள்.

    இருக்கன்குடி மாரியம்மனின் புகழ் 1600-ம் ஆண்டு முதல் மற்ற பகுதிகளுக்கு பரவத் தொடங்கியது. 1605-ம் ஆண்டு முதல் மதுரை பகுதியை ஆண்ட பாளையக்காரர்கள் இருக்கன்குடி மாரியம்மனுக்கு மானியம் கொடுத்தனர்.

    Next Story
    ×