என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
ஆடி மாதம் அம்மன் மாதம்
- வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்தமானவை.
- ஆடி மாத முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ஆடிச் சீர் செய்து மாப்பிள்ளை-பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள்.
தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது. பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.
மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்தமானவை. கூழும் விருப்பமானதே. இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத்தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.
ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகைகளாகும்.
ஆடி மாத முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ஆடிச் சீர் செய்து மாப்பிள்ளை-பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ஆடிப் பால் என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து அவரை மட்டும் அனுப்பி விட்டு, பெண்ணைத் தாய் வீட்டிலேயே ஆடி முழுவதும் தங்க வைத்துக் கொள்வார்கள்.
ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும்; தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம் கஷ்டத்தைத் தரும் என்பதால் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். (ஆடி வரை கருத்தரிக்காத புதுமணப் பெண்ணுக்குத்தான் இவை). இதை இன்னமும் பின்பற்றுகின்றனர். இதனால் 'ஆடிப் பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி' என்பார்கள்.
திருக்குற்றாலத்தில் ஆடி மாதம் மிகவும் விசேஷமாகும். சுற்றுலா செல்ல ஏற்ற மாதம் இது. 'ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்' என்பார்கள். குற்றால அருவி நீரில் மூலிகைச் சத்துகள் கலந்து வருவதால் அது மக்களுக்கு அதிக நன்மை தரும். அதனால் குற்றால அருவி நீராடல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
திருச்சியருகேயுள்ள திருநெடுங்களநாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுதும் சூரிய ஒளி மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடைபெறும். இது ஒரு சிறப்பு என்றால், இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு ஆகும்.
ஆடி மாதப் பழமொழிகள் பல. 'ஆடிப் பட்டம் தேடி விதை', 'ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்', 'ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்', 'ஆடிச் செவ்வாய் தேடிக் குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி', 'ஆடிக் கூழ் அமிர்தமாகும்'.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் அம்மன் வீதி வலம் வருவது சிறப்பான ஒன்றாகும்.
சேலம் ஏழுபேட்டைகளில் ஆடிப் பெருவிழா மிகவும் விசேஷம். ஒவ்வொரு பேட்டையிலும் ஒவ்வொரு விழா. இங்குள்ள அன்னதானப் பட்டியில் ஆடிப் பெருவிழாவின் பொங்கல் படையல், அடுத்த நாளில் குகை வண்டி வேடிக்கை ஒரு சிறப்பான விழாவாகும். அந்த ஒருநாள் மட்டும் வேறு எந்த ஊரிலும் இல்லாத விதமாக செருப்படித் திருவிழா நடக்கும். வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு தட்டில் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம், வேப்பிலை வைத்து பூசாரியிடம் தர, அவர் அதை பக்தர்கள் தலையில் மூன்று முறை நீவிவிடுவார். இதுதான் செருப்படித் திருவிழாவாகும். உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டு வந்து அம்மனை வணங்குவார்கள். இதற்கு சேத்துமுட்டி விழா என்று பெயர். அடுத்த விழா சத்தாபரண விழா. இப்படி பல விழாக்கள் விதம்விதமான மாங்கனிகள் தரும் சேலத்தில் நடைபெறுகின்றன.
திருநின்றவூரில் உள்ள நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் நாள் சக்தி மாலை அணிந்து மஞ்சளாடை தரித்து பயபக்தியுடன் ஒரு மண்டலம் விரதமிருந்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். மேல்மருவத்தூர் அம்மன் ஆலயத்திலும் இதுபோல் செய்வார்கள். அவ்வாலயம் வரும் பெண்களை அங்குள்ளோர் சக்தி என்றுதான் அழைப்பார்கள்.
கோவை ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திரில் முத்தேவியர் ஒன்றாக அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். நடுவே மகாலட்சுமியும் வலப்புறம் துர்க்கையும் இடப்புறம் சரஸ்வதியும் அமைந்துள்ளனர். தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரை நடுவேயுள்ள லட்சுமி முகத்தில் சூரிய ஒளிபடும். பகல் 12 மணிக்கு மூன்று தேவியர் முகங்களிலும் சூரிய ஒளிபடும் தரிசனத்தைக் கண்டு மகிழலாம். ஆடி மாதம் முழுதும் இவ்வாலயம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்