search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கணவன்-மனைவி பிரச்சினை தீரும்
    X

    கணவன்-மனைவி பிரச்சினை தீரும்

    • அங்காள பரமேஸ்வரியை வழிபட்டால் கணவன்-மனைவி நல்லுறவு ஏற்படும்.
    • பராசக்தி சிவ சுயம்புவாக புற்று வடிவில் அங்காள பரமேஸ்வரியாக அவதாரம் எடுத்தாள்.

    சில கணவன் மனைவி இடையே ஏற்படும் சண்டை விரிசலாகி விவாகரத்து வரை கூட சென்று விடுவதுண்டு. இத்தகைய நிலையில் இருப்பவர்கள் மேல்மலையனூர் தலத்துக்கு வந்து அங்காள பரமேஸ்வரியை வழிபட்டால் கணவன் மனைவி இடையே மீண்டும் நல்லுறவு ஏற்படும் என்பது ஐதீகமாகும்.

    சிவனை பிரிந்த பார்வதி இத்தலத்தில்தான் கடும் சோதனைகளுக்குப் பிறகு ஈசனுடன் ஒன்று சேர முடிந்தது. எனவே பெண்கள் இத்தலத்தில் மனம் உருக வழிபட்டால் கணவனை விட்டு பிரியாத வரத்தைப் பெறுவார்கள்.

    சில பெண்களுக்கு அடிக்கடி கணவரால் நிம்மதி இல்லாத நிலை ஏற்படலாம். கணவர் மது குடித்து விட்டு வந்து அடிக்கக் கூடும். இல்லையெனில் கணவர் வேலைக்கு செல்லாமல் குடும்பத்தை கவனிக்காமல் இருக்கக்கூடும்.

    இத்தகைய பாதிப்புடைய பெண்கள் அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் பிரச்சினை தீரும் என்பது நம்பிக்கையாகும்.

    மேல் மலையனூர் தலத்தில் உள்ள பெரியாயீ அம்மனுக்கு சிவப்பு கலரில் சேலை எடுத்து நேர்த்திக் கடனாக பெண்கள் செலுத்துவதுண்டு. சில பெண்கள் சிவப்பு மஞ்சள் கலந்த சேலை எடுத்து சாத்துவார்கள். இந்த நேர்த்தி கடனால் குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

    3 வகை பிரசாதம்

    மேல் மலையனூர் தலத்தில் மூன்று வகை பிரசாதங்களை பக்தர்கள் பெற முடியும்.

    தட்சனின் யாகத்தை அழிக்க புறப்பட்ட தாட்சாயினி அகோரமாக பெரிய உருவம் எடுத்து தீயில் விழுந்து யாகத்தை அழித்தாள். அவளது உருவமற்ற அவதாரமே "அங்காளி" என்று அழைக்கப்படுகிறது. அதுதான் மருவி "அங்காள பரமேஸ்வரி" என்றானது.

    அங்காளம்மன் யாக குண்டத்தில் விழுந்து சாம்பலான இடமாக இத்தலம் கருதப்படுகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில் இங்கு பக்தர்களுக்கு சாம்பலை பிரசாதமாக கொடுக்கிறார்கள்.

    தாட்சாயினி தன்னை அழித்துக் கொண்ட தகவல் அறிந்ததும் சிவன் அவளை தூக்கி ஆவேசமாக ஆடினார். அப்போது தாட்சாயினியின் கை துண்டாகி இத்தலத்தில் விழுந்தது. எனவே இத்தலம் தண்ட காருண்யம் என்ற சக்தி பீடமாக மாறியது. இதை பிரதிபலிக்கும் வகையில் இத்தலத்தில் குங்குமம் பிரசாதம் கொடுக்கிறார்கள்.

    அன்னை பராசக்தி சிவ சுயம்புவாக புற்று வடிவில் அங்காள பரமேஸ்வரியாக மேல் மலையனூரில் அவதாரம் எடுத்தார். இதனால் அந்த புற்று மகத்துவம் மிகுந்ததாக மாறியது. அந்த புற்று மண்ணை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். நோய் தீர்க்கும் அற்புதங்களை செய்வதால் மேல்மலையனூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் மற்ற பிரசாதங்களை விட புற்றுமண் பிரசாதத்தை மிகவும் விரும்பி வேண்டி கேட்டு வாங்கி செல்வதை காணலாம்.

    மக்கள் கூட்டம்

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் எத்தனையோ விழாக்கள் நடந்தாலும் மாதம் தோறும் வரும் அமாவாசை தின வழிபாடுதான் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அமாவாசை தினத்தன்று அங்காள பரமேஸ்வரியின் ஊஞ்சல் உற்சவத்தை நேரில் கண்டு வழிபட்டால் மன துயரங்கள் எல்லாம் மாயமாகி விடும் என்பது நம்பிக்கையாகும்.

    பக்தர்களிடையே இந்த நம்பிக்கை அதிகரித்து பரவி வருவதால் அமாவாசை நாட்களில் மேல் மலையனூருக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அமாவாசைக்கு அமாவாசை அதிகரித்தப்படி உள்ளது.

    சாதாரண அமாவாசை நாட்களில் சராசரியாக 5 லட்சம் பேர் மேல்மலையனூர் வருவதாக கணித்துள்ளனர். ஆடி அமாவாசை தின வழிபாடு கூடுதல் பலன்கள் தர வல்லது என்பதால் அன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் 7 லட்சம் பக்தர்கள் மேல் மலையனூருக்கு வருவார்கள்.

    Next Story
    ×