search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மேல்மலையனூர் அங்காளம்மன் வழிபாடு
    X

    மேல்மலையனூர் அங்காளம்மன் வழிபாடு

    • வேப்பஞ்சேலை வழிபாடு மேல்மலையனூரில் ஆதிகாலத்தில் தொடங்கப்பட்ட பழக்கமல்ல.
    • இத்தகைய வழிபாடுகள் எல்லாம் பாவாடைராயனுக்கே சென்று சேருகிறது.

    தலைமுடி காணிக்கை

    மேல்மலையனூர் அங்காளம்மனை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் தங்கள் குடும்பத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் மலையனூர் மாகாளி முன்பு செய்கிறார்கள். பெரும்பாலானவர்கள் இத்தலத்தில் வைத்தே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

    குழந்தை பிறந்ததும், அந்த குழந்தையை மேல்மலையனூருக்கு அழைத்து வந்து முதல் மொட்டை போட்டு தலை முடியை காணிக்கையாக கொடுக்கவும் பக்தர்கள் தவறுவது இல்லை.

    அதிலும் குறிப்பாக இந்த ஆடி மாதம் முழுவதும் இத்தலத்துக்கு வந்து மொட்டை போட்டுக் கொள்வோர்கள் ஏராளம். அங்காளம்மனை தீவிரமாக நேசிப்பவர்கள் குடும்பத்தோடு மொட்டை போட்டுக் கொள்வதுண்டு.

    அது போல சிறுமியருக்கு காது குத்துவதையும் பெரும்பாலான பக்தர்கள் இந்த தலத்திலேயே வைத்து நடத்துகிறார்கள்.

    பொங்கல் வழிபாடு

    ஆடி மாதம் அம்மன் மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தால் அம்மன் கேட்ட வரங்கள் மட்டுமின்றி கேட்காத வரங்களையும் அள்ளி தருவாள் என்று பெண்கள் நம்புகிறார்கள். இதனால்தான் ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் அதிகளவில் அம்மன் ஆலயங்களில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடுகள் செய்வதுண்டு.

    மேல்மலையனூர் தலத்திலும் அம்மனுக்கு பொங்கல் வழிபாடு வைப்பது ஆதிகாலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. சமீப ஆண்டுகளாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் மலையனூர் மாகாளிக்கு பொங்கல் வைக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.

    இதையடுத்து மேல்மலையனூர் தலத்தில் பொங்கல் வைப்பதற்காகவே தனிப்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வெளியூர் செல்பவர்கள் அங்கு பொங்கல் வைத்து அங்காளம்மனை மனதார வழிபட்டு வரலாம். அதிகாலை முதல் மாலை வரை பொங்கல் வைத்து வழிபடலாம்

    என்றாலும், ராகு காலத்தில் மட்டும் பொங்கல் வைத்து வழிபட வேண்டாம் என்று சொல்கிறார்கள். பொங்கல் பிரசாதம் படைப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அதை வீடுகளுக்கு எடுத்து சென்று விடுகிறார்கள்.

    ஆனால் பொங்கல் நைவேத்தியத்தை அங்காளம்மனுக்கு படைத்து வழிபட்ட பிறகு அதை கோவிலில் உள்ள பக்தர்களுக்கு பகிர்ந்து அளிப்பது நல்லது. பக்தர்களுக்கு இந்த பிரசாதத்தை வினியோகிப்பது மூலம் பொங்கல் வழிபாடு செய்பவர்களுக்கு நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

    ஆடு&கோழி பலி

    மேல்மலையனூர் தலத்தில் ஆடி மாதம் ஆடு, கோழி பலியிடுவது வழக்கத்தில் உள்ளது. ஆனால் கோவிலுக்குள் எத்தகைய பலி வழிபாடுகளும் நடப்பதில்லை. கோவிலுக்கு வெளியே தூரத்தில்தான் அவற்றை செய்கிறார்கள்.

    மேல்மலையனூர் தலத்தில் காவல் தெய்வமாக இருக்கும் பாவாடைராயனுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் சமர்ப்பிப்பார்கள். அங்காளம்மன் ஒருதடவை, "எனக்கு படைக்கப்படும் உணவுகள் உன்னைச் சாரும்" என்று, பாவாடைராயனிடம் கூறி இருந்தாளாம். எனவே இத்தகைய வழிபாடுகள் எல்லாம் பாவாடைராயனுக்கே சென்று சேருகிறது.

    ஆடி மாதம் அங்காளம்மனை வழிபடுபவர்கள் மறக்காமல் பாவாடைராயனையும் வழிபட்டு வர வேண்டும். அவர் நம் வழிப்பயணத்துக்கு துணை இருப்பார் என்பது ஐதீகம்.

    ஆடு& கோழி சுற்றி விடுதல்

    சமீப காலமாக பக்தர்கள் ஆடு, கோழி பலியிடுவதை குறைத்து வருகிறார்கள். அதற்குபதிலாக கோவில் அருகில் சென்று ஆடு, கோழிகளை சுற்றி விட்டுவிட்டு வந்து விடுகிறார்கள்.

    இதன் மூலம் தங்கள் பிரார்த்தனை நிறைவுபெறுவதாக நம்புகிறார்கள். அதுமட்டுமின்றி இந்த சுற்றிவிடும் வழிபாடு மிக எளிய பரிகாரமாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் இந்த வழிபாட்டை பின்பற்றுகிறார்கள்.

    கடந்த சில மாதங்களாக மேல்மலையனூர் தலத்தில் ஆடு, கோழி மட்டுமின்றி மாடுகளையும் கூட சுற்றி விட்டு நேர்த்தி கடன் செய்கிறார்கள்.

    வேப்பஞ்சேலை வழிபாடு

    அங்காளம்மனை வழிபடும் பெண்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றகோரி ஆலயத்தில் வேப்பஞ்சேலை அணிந்து வழிபாடு செய்வதுண்டு. பொதுவாக வேப்பஞ்சேலை வழிபாடு மேல்மலையனூர் கோவிலில் ஆதிகாலத்தில் இருந்து தொடங்கப்பட்ட பழக்கமல்ல. சென்னை அருகே உள்ள பெரியபாளையம் கோவிலில்தான் இந்த வழிபாடு அதிகஅளவில் நடக்கிறது.

    சமீப காலமாக மேல்மலையனூர் கோவிலுக்கு வரும் பெண்களும் இந்த வழிபாட்டை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள். இந்த வழிபாடு செய்தால் அம்மன் மனம் இறங்கி வேண்டும் வரம் தருவாள் என்பது நம்பிக்கை.

    தீச்சட்டி ஏந்துதல்

    மலையனூரில் பிரார்த்தனைக்கு வருபவர்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை வலம் வந்து வழிபடுவதுண்டு. ஆடி மாதம் தீச்சட்டி எடுத்து நேர்த்திகடன் நிறைவேற்றும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கோவில் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த நேர்த்திகடன் செய்பவர்கள் முதலில் அக்னி குளத்தில் நீராடி அங்கிருந்து தீச்சட்டி ஏந்தி வருவார்கள். சிலர் அழகு குத்தியும் தீச்சட்டி ஏந்தி வருவதுண்டு.

    பித்ரு தர்ப்பணத்தை மேம்படுத்தும் அம்மன்

    நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆடி அமாவாசை தினமாகும். இந்த நாள் மறைந்த முன்னோர்களான பித்ருகளை நினைத்து வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள்.

    நாளை காலை புண்ணிய தீர்த்தங்கள், நதிகள், கடலோர பகுதிகளில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்வு நடைபெறும். அதன் பிறகு வீடுகளிலும் முன்னோர்களுக்கு சிலர் படையல் செய்து வழிபடுவது உண்டு.

    ஆனால் பித்ரு தர்ப்பணம் செய்த பிறகு வீட்டிற்கு வராமல் நேரடியாக மேல்மலையனூர் அங்காளம்மன் தலத்துக்கு சென்று அம்மனை வழிபட்டால் பித்ரு தர்ப்பணத்தை மேம்படுத்தும் பலன் கிடைக்கும்.

    அதாவது நாம் பித்ருக்களுக்கு செய்த தர்ப்பணங்கள் முழுமையாக அவர்களை சென்று சேர அங்காளம்மன் உதவுவாள் என்பது ஐதீகம். ஆதிகாலத்தில் அங்காளம்மன் இத்தலத்தில் அவதாரம் எடுத்து பல்வேறு ஆத்மாக்களுக்கு ஞானம் வழங்கி உயர்வு கொடுத்தாள்.

    எனவேதான் பித்ரு தர்ப்பணத்திற்கு பிறகு அங்காளம்மனை வழிபடுவது நல்லது என்று சொல்கிறார்கள்.

    மஞ்சள் ஆடை

    ஆடி மாதம் மலையனூர் தலத்துக்கு செல்பவர்கள் அம்மனுக்கு புடவை சாத்தி வழிபாடு செய்யலாம். அம்மனுக்கு மிகவும் உகந்தது மஞ்சள் நிற உடையாகும். அது கிடைக்காத பட்சத்தில் சிவப்பு கலரில் புடவைகள் வாங்கி சாத்தலாம்.

    புற்றை சுற்றினால் பித்து நீங்கும்

    மேல்மலையனூரில் புற்றுக்கும் அங்காளம்மனுக்கும் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆடி மாதம் இந்த அபிஷேகத்தை செய்தால் மிகவும் நல்லது. அங்காளம்மனுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அபிஷேகம் செய்ய இயலாது. மற்ற சாதாரண நாட்களில்தான் இந்த வழிபாட்டை நடத்த முடியும்.

    அம்மனுக்கு அபிஷேகம் சாதாரண நாட்களில் எந்த நேரத்திலும் நீங்கள் விரும்பும் நேரத்திலே அமைத்து கொள்ள முடியும். இந்த வழிபாடு செய்வதால் கடன் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

    அதுபோல அங்காளம்மன் தலத்தில் உள்ள புற்றுக்கும் அபிஷேக வழிபாடுகள் செய்யலாம். புதிய புற்று மண் தூவி அதன் மேல் மஞ்சள் தண்ணீர் தெளித்து குங்குமம் பூசுவார்கள். இதுவும் அம்மனை குளிர வைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

    புற்றுக்கு அபிஷேகம் செய்வதால் குழந்தை பாக்கியம், திருமண யோகம் கைகூடும் என்பது ஐதீகமாகும்.

    மலையனூரில் உள்ள புற்றை சுற்றி வந்து வணங்கினால் பித்து நீங்கும் என்பது பலமொழியாக சொல்லப்பட்டு வருகிறது. எனவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த புற்று மண்ணை பூசி விட்டால் குணமாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மேல்மலையனூர் தலத்துக்கு அழைத்து சென்று ஓர் இரவு தங்க வைத்தாலே போதும் குணம் அடைந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி பலன் அடைந்தவர்கள் ஏராளமானவர்கள் ஆவர்.

    Next Story
    ×