என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
தெய்வானை திருக்கல்யாணம்
- கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார்.
- திருச்செந்தூரில் முருகன் “ஞானகுரு’வாக அருளுகிறார்.
சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார்.
இவர்களது திருமணம் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள். மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார்.
நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும். மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்.
முருகனுக்கு மஞ்சள் நீராட்டு
கிராமங்களில் திருவிழாவின்போது, கன்னிப்பெண்கள் தங்க ளது முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். இத்தலத்திலும் இவ்வாறு முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடக்கும். கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார்.
அப்போது, பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகனை வரவேற்கும்விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தைக் குறைக்கும் விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.
மும்மூர்த்தி முருகன்
முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். சூரனை சம்ஹாரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர்.
இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும்விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.
விழாவின் 7-ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8-ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார்.
நான்கு உற்சவர்கள்
பொதுவாக கோயில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இவர்களில் குமரவிடங்கர், "மாப்பிள்ளை சுவாமி' என்றழைக்கின்றனர்.
சந்தனமலை
முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்தது போலவும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோயிலே ஆகும். இக்கோயில் கடற்கரையில் இருக்கும் "சந்தனமலை'யில் இருக்கிறது.
எனவே இத்தலத்தை, "கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.
குரு பெயர்ச்சி
திருச்செந்தூரில் முருகன் "ஞானகுரு'வாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர் களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், "குரு தலமாக' கருதப்படுகிறது.
பிரகாரத்தில் உள்ள மேதா தெட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது.
அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் இவரை, "ஞானஸ்கந்த மூர்த்தி' என்று அழைக்கிறார்கள். வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார். குரு பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குருவினால் உண்டாகும் தீய பலன்கள் குறையும்.
இரண்டு முருகன்
சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம் கிடையாது.
இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரை சுற்றி வழிபட பிரகாரம் இருக்கிறது. மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகளே இவருக்கு செய்யப்படுகிறது.
தீபாவளிக்கு புத்தாடை ஊர்வலம்
மகாவிஷ்ணு, நரகாசுரனை அழித்து மக்கள் இன்புற்ற தீபாவளி நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி மகிழ்கிறோம். திருச்செந்தூர் கோயிலிலும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது.
அன்று அதிகாலையில் இக்கோயிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று, அணிவிக்கின்றனர்.
இதை, தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், இந்திரன் இத்தலத்தில் மருமகனுக்கும், அவரை சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.
திருவிழா
பங்குனி உத்திரம், திருகார்த்திகை , வைகாசி விசாகம், கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
தமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் அலைவாய், சீரலைவாய் என்கிற பெயர்களில் போற்றப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்