search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மயிலையிலே கோவில் கொண்டாள் முண்டகக்கண்ணி அம்மா....
    X

    மயிலையிலே கோவில் கொண்டாள் முண்டகக்கண்ணி அம்மா....

    • சென்னை மாநகருக்கே ஆதி சக்தியாக முண்டகக்கண்ணியம்மன் திகழ்கிறாள்.
    • முண்டகக்கண்ணியம்மனை வணங்கியே எந்த நல்ல செயலையும் தொடங்குகிறார்கள்.

    சென்னை மாநகரின் இதயப் பகுதியாகத் திகழும் மயிலாப்பூருக்கு எத்தனையோ சிறப்பம்சங்கள் உள்ளன. மயிலை என்றதும் பெரும்பாலனவர்களுக்கு கபாலீஸ்வரர் தான் நினைவுக்கு வருவார்.

    அதனால் தான் மயிலையே கயிலை, கயிலையே மயிலை என்பார்கள்.

    ஈசன் சிறப்பு பெற்ற இந்த இடத்தில் அம்பிகையின் ஆட்சி இல்லாமல் இருக்குமா? மயிலையில் அம்மன் என்றதும் மறுவினாடி முண்டகக்கண்ணி அம்மன் தான் நம் மனக்கண் முன் வந்து நிற்பாள்.

    மயிலையில் கோலவிழி அம்மன், தண்டு மாரியம்மன் உள்பட பல அம்மன் தலங்கள் உள்ளன. என்றாலும் முண்டகக்கண்ணி அம்மன் முதன்மைச் சிறப்பு பெற்று திகழ்கிறாள்.

    மயிலாப்பூருக்கு மட்டுமல்ல சென்னை மாநகருக்கே இன்று அருள்புரியும் ஆதி சக்தியாக முண்டகக்கண்ணியம்மன் திகழ்ந்து கொண்டிருக்கிறாள்.

    சென்னையில் உள்ள பழமையான பல ஆலயங்களுடன் ஒப்பிடுகையில் முண்டகக்கண்ணி அம்மன் அதைவிட பழம்பெருமையும், பல்வேறு சிறப்புக்களையும் கொண்டிருப்பது தெரியவரும்.

    சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் இருக்கும் பகுதி ஒரு குளமாக இருந்தது. அந்த குளம் கபாலீஸ்வரர் கோவிலுக்குரிய குளமாகவோ அல்லது விவசாய பாசனத்துக்குரிய குளமாகவோ இருந்திருக்கலாம் என்கிறார்கள்.

    அந்த குளக்கரையில் பல நூறு ஆண்டு வயதுடைய மிகப்பெரிய ஆலமரம் இருந்தது. குளத்துக்கு வரும் மக்கள் அந்த ஆலமரத்தடியில் அமர்ந்து செல்வது வழக்கம்.

    ஒரு நாள் அந்த ஆலமரத்தடியில் அந்த ஊர் பகுதி மக்கள் அமர்ந்து இருந்தபோது அம்மன் தன்னை சுயம்புவாக வெளிப்படுத்தி இருப்பதை கண்டனர். அவர்களில் ஒருவர் மீது அருள் வந்து அம்மன் தன்னை வெளிப்படுத்தி இருப்பதை தெரிவித்தாள்.

    உடனே அந்த கிராமத்தினர் திரண்டு வந்து அம்மன் சுயம்புவாக தோன்றி இருப்பதை கண்டனர். ஒரு தாமரை மொட்டு எப்படி இருக்குமோ, அப்படி அந்த சுயம்பு வடிவம் இருந்தது.

    கிராம மக்கள் அந்த சுயம்பு அம்மனை தங்களின் காவல் தெய்வமாக கருதினார்கள். எனவே அந்த ஆலய மரத்தடியில் குடிசை ஒன்று அமைத்து அம்மனை வழிபடத் தொடங்கினார்கள்.

    அந்த அம்மனுக்கு ஒரு பெயர் வைக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தபோது கிராமத்தில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு பெயரை கூறினார்கள். ஊரின் எல்லையில் இருப்பதால் எல்லை அம்மன் என்று பெயர் வைக்கலாம் என்று நினைத்தனர்.

    ஆயிரம் நாமம் கொண்ட அன்னை அவ்வளவு எளிதில் பெயரை ஏற்கவில்லை. அவள் விருப்பம் நிறைவேறும் வரை விட மாட்டாளே...!

    அப்போது தாமரைக்குளக்கரையில் தோன்றியதாலும், தாமரை மொட்டு வடிவத்திலேயே தன்னை அம்மன் சுயம்புவாக வெளிப்படுத்திக் கொண்டதாலும் தாமரை என்ற தமிழ் சொல்லுக்குரிய முண்டகம் என்பதை கொண்டு தொடங்க அம்மனை சேர்த்து `முண்டகக்கண்ணி அம்மன்' என்ற பெயர் வைக்கலாம் என்ற கருத்து எழுந்தது. அம்பிகையின் விருப்பமும் அதுவாகவே இருந்தது.

    இதனால் அந்த அம்மன் முண்டகக்கண்ணி அம்மன் என்று அழைக்கப்பட்டாள் முண்டகக்கண்ணி என்ற சொல்லுக்கு பிறகு வந்தவர்கள் பல, பல அர்த்தங்கள் கண்டு பிடித்து கூறினாலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரணம் தான் பொதுவானதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

    ஓலைக்குடிசையில் உருவான இந்த கோவில் முதலில் கிராமக் கோவிலாக இருந்தது. அந்த அம்மன் உருவானதற்கு பிறகு அந்த ஊரின் வளர்ச்சியிலும், மக்களின் முன்னேற்றத்திலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. இதனால் முண்டகக்கண்ணி அம்மனின் புகழ் பரவியது.

    மயிலையில் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் கொண்டிருக்கிறாள் என்று நகர மக்களிடம் பேச்சு எழுந்தது. ஆங்கிலேயர்கள் சென்னை வரும் முன்பே முண்டகக்கண்ணி அம்மன் மக்களின் மனதில் இடம் பிடித்திருந்தாள்.

    ஆங்கிலேயர்களிடம் சென்னை நகரம் ஆளுமைக்குள் சென்றபோது, முதலில் அவர்கள் ஏதோ ஒரு சிறு கோவில் என்றே நினைத்தனர். விசேஷ நாட்களில் மக்கள் அம்மனை காண திரள்வதை கண்ட பிறகு அவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக்கொண்டனர். அவர்களும் முண்டகக்கண்ணி அம்மனை தேடி வந்து வழிபட்டு சென்றனர்.

    இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இத்தலத்தில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. 1950 களிலேயே இந்த கோவில் கிராம கோவில் என்ற நிலையில் இருந்து மாறி, அரசு கோவிலாக மாறியது.

    இதற்கிடையே முண்டகக்கண்ணி அம்மனின் புகழ் சென்னை முழுவதும் பரவியது. மக்கள் சாரை சாரையாக வந்தனர்.

    இன்று சென்னையில் உள்ள பக்தர்கள் ஒவ்வொரு வரும் முண்டகக்கண்ணியம்மன் அருள் மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். முண்டகக்கண்ணியம்மனை வணங்கியே எந்த நல்ல செயலையும் தொடங்குகிறார்கள்.

    அந்த வகையில் இன்று சென்னை நகர மக்களின் உணர்வோடும், ஆத்ம ஞான சிந்தனையோடும் கலந்து விட்ட ஒரு அம்பிகையாக அருள்மிகு ஸ்ரீமுண்டகக்கண்ணியம்மன் திகழ்கிறாள்.

    Next Story
    ×