search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஸ்ரீ முண்டகக்கண்ணியம்மன் சிறப்புகள்-40
    X

    ஸ்ரீ முண்டகக்கண்ணியம்மன் சிறப்புகள்-40

    • தாய்மையின் வடிவமாக முண்டகக்கண்ணியம்மன் அருள் பாலிப்பதாக பெண்கள் நம்புகிறார்கள்.
    • முண்டகக்கண்ணி அம்மன் அந்த பெண்ணின் மாங்கல்ய தோஷத்தை தீர்ப்பதாக ஐதீகம்.

    1. முண்டகக்கண்ணியம்மன் அவதாரம் நடந்த போது முதலில் அதை மயிலை கிராம மக்கள் எல்லை காவல் தெய்வமாகவே பார்த்தனர்.

    2. முண்டகக் கண்ணி அம்மன் முதலில் சென்னை கடலோரத்தில் தோன்றியதாகவும், அவள் சுயம்புவாக தோன்றிய இடத்தில் இருந்து கடல் உள்வாங்கி சென்று விட்டதாகவும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

    3. ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். அதே தினத்தன்று முண்டகக்கண்ணி அம்மனுக்கும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு அன்னத்திலும் அம்மன் இருந்து அருள்புரிவதாக கருதப்படுகிறது.

    4. இத்தலத்தின் தல மரம் ஆலமரமாகும். தற்போது கல் மரம் ஒன்றும் தல விருட்சம் போல வளர்ந்து வருகிறது.

    5. முண்டகக்கண்ணி அம்மன் என்ற பெயரில் சென்னையில் வேறு எங்கும் ஆலயங்கள் இல்லை. முண்டகக்கண்ணி அம்மன் என்றாலே அது மயிலை முண்டகக்கண்ணியைத்தான் குறிக்கும்.

    6. முண்டகக்கண்ணி அம்மனை ரோட்டில் போகும் போதே மிக எளிதாக தரிசிக்க முடியும். அதற்கு ஏற்ப கோவில் அமைப்பு உள்ளது.

    7. முண்டகக் கண்ணி அம்மன் ஆலயத்துக்கு வரும் பக்தர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் தான்.

    8. பெரியபாளையம் தலத்தில் செய்வது போல சில சமயம் இங்கும் பெண்கள் வேப்பஞ்சேலை அணிந்து, கோவிலை வலம் வந்து பிரார்த்தனை செய்வதுண்டு.

    9. அம்மை நோய், கண் நோய், ராகு-கேதுவால் ஏற்படும் திருமண தோஷ நிவர்த்தி ஆகிய மூன்றுக்கும் இத்தலம் மிகச் சிறந்த பரிகார தலமாக உள்ளது.

    10. முண்டகக் கண்ணியம்மனிடம் வைக்கப்படும் பிரார்த்தனை நிறைவேறியதும், பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து அபிகேஷகம், அங்க பிரதட்சனம் செய்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.

    11. முண்டகக்கண்ணி அம்மன் கோவில் அருகில் கபாலிஸ்வரர் கோவில், மாதவப் பெருமாள் கோவில் உள்ளன. அம்மனை வழிபட செல்லும் போது இத்தலங்களுக்கும் சென்று வரலாம்.

    12. முண்டகக்கண்ணி அம்மன் இப்போதும் ஓலைக் குடிசையிலேயே இருப்பதால், அவள் இதன் மூலம் எளிமையை தன் பக்தர்களுக்கு உணர்த்துவதாக ஐதீகம்.

    13. தாய்மையின் வடிவமாக முண்டகக்கண்ணியம்மன் அருள் பாலிப்பதாக பெண்கள் நம்புகிறார்கள்.

    14. மயிலை பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டில் நடக்கும் எல்லா நல்ல நிகழ்ச்சிகளுக்கும் முன்பு முதல் பிரார்த்தனையை ஸ்ரீ முண்டகக் கண்ணி அம்மனுக்கு நடத்துவதையே வழக்கமாக வைத்துள்ளனர்.

    15. அருள்மிகு முண்டகக்கண்ணி அம்மன் கோவில் அருகில் உள்ள தெருக்களில் வசிக்கும் பெண்கள் காலை 5.45 மணிக்கெல்லாம் வந்து நடை திறந்ததும் அம்மனை கண்டு தரிசனம் செய்த பிறகே வேறு வேலை செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    16. அருள்மிகு முண்டக்கண்ணி அம்மனை மகா மாரியம்மன் என்றும் அழைக்கிறார்கள்.

    17. ஆடி மாதத்தில் அம்மனுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அபிஷேகம் நடத்த பலரும் விரும்புவார்கள். அந்த வகையில் தினமும் இத்தலத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கட்டணம் செலுத்தி அபிஷேகம் நடத்தி மன ஆறுதல் பெறுகிறார்கள்.

    18. முண்டகக்கண்ணி அம்மனுக்கு தினமும் காலை அபிகேஷம் நடத்தும் போது பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், எலுமிச்சை என்று அம்மன் மனம் குளிரும் வகையில் அபிஷேகம் செய்வார்கள்.

    19. மாலையில் தினமும் அம்மனை வெள்ளி அல்லது தங்க கலசத்தால் அலங்கரிப்பார்கள். இதனால் முண்டகக்கண்ணி அம்மனை காலையில் அபிஷேகப் பிரியை, மாலையில் அலங்காரப் பிரியை என்று மயிலைப் பகுதி மக்கள் சொல்கிறார்கள்.

    20. ஆடிப்பூரத்தை முன்னிட்டு சுமார் 5 ஆயிரம் பெண்கள் முண்டகக்கண்ணி அம்மனுக்கு வளையல் சார்த்தி வழிபாடு செய்வதாக தெரிய வந்துள்ளது.

    21. முண்டகக்கண்ணி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2003ம் ஆண்டு நடந்தது. 12 ஆண்டுகள் கடந்து விட்டதால் வரும் தை மாதம் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    22. இத்தலத்தில் ஆடித் திருவிழா மிகவும் விமரிசையாக நடக்கும்.

    23. முண்டகக்கண்ணி அம்மனை வழிபட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

    24. தினமும் இத்தலத்தில் அன்னதானம் போடப்படுகிறது. நீங்கள் ரூ.2 ஆயிரம் செலுத்தினால் 100 பேருக்கு அன்னதானம் அளிக்கலாம்.

    25. 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் முண்டகக்கண்ணி அம்மனை தொடர்ந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

    26. இத்தலத்தில் ரூ.1500 கட்டணம் செலுத்தி தங்க ரதம் இழுக்கலாம்.

    27. முண்டகக்கண்ணி அம்மன் தோன்றிய சுயம்புவின் முகப்புத் தோற்றத்தில் நடுப்பகுதியில் திரிசூலம் பதிக்கப்பட்டுள்ளது. அபிஷேகம் நடக்கும் போது உன்னிப்பாக கவனித்தால் இதை காணலாம்.

    28. வெப்பத்தை தான் தாங்கிக் கொண்டு, மக்களுக்கு குளிர்ச்சியை அளிக்கவே முண்டகக்கண்ணி அம்மன் ஓலைக்குடிசையில் வீற்றிருப்பதாக முன்னோர்கள் சொல்லியுள்ளனர்.

    29. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முண்டகக்கண்ணி அம்மனிடம் வேண்டிக் கொண்டு, நோய் நிவர்த்தியானதும், அந்த உடல் உறுப்பு போன்ற வெள்ளி கவசங்களை வாங்கி உண்டியலில் போடுகிறார்கள்.

    30. சில பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் ஏற்படலாம். அந்த தோஷ நிவர்த்திக்கு மாங்கல்யத்தை கழற்றி உண்டியலில் போட்டு வருகிறார்கள். இதன் மூலம் முண்டகக்கண்ணி அம்மன் அந்த பெண்ணின் மாங்கல்ய தோஷத்தை தீர்ப்பதாக ஐதீகம்.

    31. முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் மிகச் சிறந்த பரிகாரத்தலமாக மட்டுமல்ல, சிறந்த பிரார்த்தனைத் தலமாகவும் உள்ளது.

    32. இத்தலத்தில் உள்ள தங்கரதம் முழுக்க-முழுக்க பக்தர்கள் கொடுத்த உண்டியல் பணம் மூலம் செய்யப்பட்டதாகும். அம்மன் தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.

    33. முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் மாவிளக்கு, ஆடு, கோழி சுற்றி விடுதல், பாவாடை சாத்துதல், முடி காணிக்கை கொடுத்தல், வேப்பிலை சாத்துதல், தொட்டில் பிள்ளை, மஞ்சள் காப்பு, பூங்கரகம் எடுத்தல் போன்ற நேர்ச்சை கடன்களை நிறைவேற்றுவது உண்டு.

    34. இத்தலத்தில் கூழ்கஞ்சி வார்த்தல் செய்ய வேண்டுமானால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

    35. பக்தர்கள் விரும்பினால் கோடி தீபம் விளக்கு ஏற்றலாம். ஒரு விளக்குக்கு ரூ.2 தான் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

    36. இத்தலத்தில் கருவறையை நெருங்கியதும் மஞ்சள், இளநீர், பால், பூக்கள், எலுமிச்சம்பழம் ஆகியவற்றின் கதம்பமான வாசனையை பக்தர்கள் உணர முடியும்.

    37. இத்தலத்தில் உள்ள நாகர் சிலைக்கு பெண்கள் தங்கள் கைப்பட மஞ்சள் தெளித்து குங்குமம் வைத்து வழிபட அனுமதிக்கிறார்கள்.

    38. முண்டகக்கண்ணி அம்மன் பார்வைபட்டால் போதும் நம் வாழ்வில் சுபீட்சம் ஏற்படும் என்று வயதான பக்தர்கள் நம்பிக்கையான குரலில் கூறினார்கள்.

    39. இத்தலத்துக்கு வாடிக்கையாக வரும் பக்தர்கள் முண்டகக்கண்ணி அம்மனை வணங்கும் போது, ஏதோ தங்கள் வீட்டில் உள்ள ஒருவரிடம் சகஜமாக பேசுவது போல பேசி வழிபடுவதை காணலாம்.

    40. இத்தலம் தொடர்பான விவரங்களை (044) 24981893 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    Next Story
    ×