என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
கவலை போக்கும் தீபம்
- தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும், வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும். லட்சுமியின் அருள் கிடைக்கும்.
- சுபகாரியங்களில் குத்துவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும். இது பித்தளை அல்லது வெள்ளி குத்துவிளக்காக இருக்க வேண்டும்.
தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற 3 சக்திகளும் உள்ளன. தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது. அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது.
தினமும் மாலையில் தீபம் வைத்து வணங்கிப் பூஜை செய்ய வேண்டும். பொது இடங்களில் பலரும் சேர்ந்து கூட்டாகத் தீபவழிபாடு செய்யலாம். வீட்டிலே சாமிக்கு முன்னால் சின்னதாக அகல் விளக்கு ஏற்றி, 1 மணி நேரமாவது எரிவதற்கு எண்ணெய் விட்டு, பூட்டுபோட்டு, தேவியை மனதில் தியானித்துப் பூஜை செய்ய வேண்டும். அப்படிச் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி எல்லாவிதமான சந்தோஷங்களும், சவுபாக்கியங்களும் ஏற்படும். வீட்டிலே நாம் இம்மாதிரி தீபபூஜை செய்யும்போது, பக்கத்திலேயே குழந்தைகளை வைத்துக்கொண்டு செய்ய வேண்டும். அவர்களையும் நல்ல சுலோகங்களை பாடல்களைப் படிக்க வைத்து பூஜையில் ஈடுபடுத்த வேண்டும்.
தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும், வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும். லட்சுமியின் அருள் கிடைக்கும்.
ஒவ்வொரு மாதம் அமாவாசை மற்றும் பவுர்ணமியில் திருவிளக்கு ஏற்றி விளக்கு பூஜை செய்தால் கீழ்கண்டபடி பலன்கள் கிடைக்கும்.
சித்திரை- தான்யம் உண்டாகும்
வைகாசி- செல்வம் கிடைக்கும்
ஆனி- விவாகம் நடக்கும்
ஆடி- ஆயுள் விருத்தி
ஆவணி- புத்திரப்பேறு உண்டாகும்
புரட்டாசி- பசுக்கள் விருத்தி
ஜப்பசி- பசிப்பிணி நீங்கும்
கார்த்திகை- நற்கதி உண்டாகும்
மார்கழி- ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும்
தை- வாழ்வில் வெற்றி கிடைக்கும்
மாசி- துன்பம் அகலும்
பங்குனி- தர்மசிந்தனை பெருகும்
சுபகாரியங்களில் குத்துவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும். இது பித்தளை அல்லது வெள்ளி குத்துவிளக்காக இருக்க வேண்டும். எவர்சில்வர் குத்துவிளக்கு ஏற்ற வேண்டாம்.
குத்துவிளக்கு மும்மூர்த்திகளின் வடிவம். குத்துவிளக்கின் தாமரை வடிவமான ஆசனமாகிய அடிப்பாகம் பிரம்ம அம்சம். நீண்ட தண்டு (நடுப்பாகம்) விளக்கேற்றி வைக்கும்பொழுது அது கிழக்குத் திசை பார்த்து இருக்க ஏற்றி வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தெற்கு திசை பார்க்க ஏற்றி வைக்கக்கூடாது.
5 செல்வம் தரும் முக விளக்கு
காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டில் தீபம் ஏற்றுவது சர்வ மங்கள யோகம் தரும். ஒரு முகம் உள்ள விளக்கை ஏற்றுவதால் மத்திய பலன் கிட்டும், இருமுகம் உள்ள விளக்கை ஏற்றுவதால் குடும்ப ஒற்றுமைக் கிட்டும். மூன்று முகம் கொண்ட விளக்கை ஏற்றுவதால் புத்திர சுகம், நான்கு முகம் கொண்ட விளக்கை ஏற்றினால் பசு, பூமி லாபம் கிடைக்கும். ஐந்து முகம் கொண்ட விளக்கை ஏற்றினால் இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகும்.
விளக்குகளில் பித்தளை, வெள்ளி, அகல் விளக்குகள் கூட உள்ளன. ஆனால், மண்ணால் செய்யப்பட்ட விளக்குகளும், வெள்ளை, பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட விளக்குகளும் பூனைக்கு மிகவும் உகந்தது என்று கூறப்படுகிறது. விளக்கேற்றுவதில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு எண்ணெய் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
அதாவது மகாலட்சுமி தாய்க்கு நெய் விளக்கும், நாராயணனுக்கு நல்லெண்ணையும், கணபதிக்கு தேங்காய் எண்ணையும், ருத்ராதி தேவதைக்கு இலுப்பு எண்ணையும், தேவிக்கு ஐந்து வகை எண்ணையும் சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணையும் சிறப்பு வாய்ந்தது.
திசைகளும் தீபங்களும்
நாம் அன்றாடம் காலையும், மாலையும் பூஜை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம். தினம் தீபம் ஏற்றும் நம்மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றியும், அவை தரும் பலன்கள் பற்றியும் தெரியும்?
தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத்தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும்.
மேற்குத்திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். கடன் தொல்லைகள் விலகும். சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.
தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.
தோஷம் நீங்க ஏற்ற வேண்டிய தீபங்கள்
1. ராகு தோஷம்- 21 தீபங்கள்
2. சனி தோஷம்- 9 தீபங்கள்
3. குரு தோஷம்- 33 தீபங்கள்
4. துர்க்கைக்கு- 9 தீபங்கள்
5. ஈஸ்வரனுக்கு- 11 தீபங்கள்
6. திருமண தோஷம்- 21 தீபங்கள்
7. புத்திர தோஷம்- 51 தீபங்கள்
8. சர்ப்ப தோஷம்- 48 தீபங்கள்
9. கால சர்ப்ப தோஷம்- 21 தீபங்கள்
10. களத்திர தோஷம்- 108 தீபங்கள்.
விடியற்காலை விளக்கு வழிபாடு
விடியற்காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வமங்கள யோகம் உண்டாகும்.
பூஜைக்கு ஏற்ற விளக்குகள்
குத்து விளக்கு அல்லது பூஜை விளக்குகளுக்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது. ஐம்பொன் விளக்கு அடுத்து சிறப்புடையது. வெண்கல விளக்கு அடுத்து சிறப்புடையது. பித்தளை விளக்கு அதற்கு அடுத்து சிறப்புடையது. எக்காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை பூஜைக்கோ, வீடுகளில் ஏற்றுவதற்கோ பயன்படுத்தக்கூடாது. அதைவிட மண் அகல் விளக்கு உத்தமம்.
தீபம் பேசும்
ஏதாவது ஒரு அமாவாசை அன்று 50 கிராம் பசுநெய்யும், 50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும். இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். விளக்கில் இருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும். நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும்.
108 முறைக்கு குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்து வரவேண்டும். வாயாலும் சொல்லலாம்.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி
ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா
சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும். உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வையும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களைத் தாண்டும் வழிமுறைகளையும், நீங்கள் கண்கூடாக உணர முடியும்.
இந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும்.
தீபம் ஏற்றும் முறை
முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும், 2வது வடக்கு நோக்கி ஒரு திரியும், 3வது மேற்கு நோக்கி இரு திரியும் ஏற்ற வேண்டும். தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. குளிர்விக்கும்போது, முதலில் மேற்கே உள்ள திரிகளையும், 2வது வடக்கே உள்ள திரியையும், 3-வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும்.
ஊதி அணைக்க கூடாது. மேற்கூறிய முறைப்படி, 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில்- தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி- எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும். குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் குறையும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
தீபம் பிரகாசிக்கும் இடத்தில் லட்சுமி கடாட்சம் நிலவும்
கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல் நாள் பரணி தீபம், மறுநாள் கார்த்திகை தீபம், கார்த்திகை மாத முப்பது நாட்களிலும் தீபகானம் செய்ய வேண்டும். வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் பவுர்ணமி முதல் மூன்று நாட்களாவது தங்களுடைய வீட்டில் வரிசையாக தீபம் ஏற்ற வேண்டும். தீபம் எங்கெல்லாம் பிரகாசமாக ஜொலிக்கின்றதோ அங்கே லட்சுமி கடாட்சம் உண்டாகும். பொதுவாக தீபம் சந்ததியை வளர்க்கும் என்பது சமய குரவர்களின் கூற்றாகும். வசதிக்கேற்றபடி நெய், நல்லெண்ணெய், இலுப்பெண்ணெய், தீபங்கள் ஏற்றலாம்.
எவ்வளவு தீபம் ஏற்ற வேண்டும்?
1 தீபம்: மன அமைதி
9 தீபங்கள்: நவக்கிரக பிணி நொடியில் அடங்கும்.
12 தீபங்கள்: ஜென்ம ராசியில் உள்ள தோஷம் நீங்கும்.
18 தீபங்கள்: சக்தி தரும் சக்தி தீபம்.
27 தீபங்கள்: நட்சத்திர தோஷம் நீங்கும், விரும்பியது கிட்டும்.
48 தீபங்கள்: தொழில் வளரும், பயம் நீங்கும்.
108 தீபங்கள்: நினைத்த காரியம் கை கூடும்.
508 தீபங்கள்: திருமண தடை நீங்கும்.
1008 தீபங்கள்: குழந்தை பாக்கியம் உண்டாகும்.
சொக்கப்பனை
வீட்டளவில் தீபம் என்பது ஊரளவில் சொக்கப்பனை. சொக்கப்பனையின் உள்ளர்த்தம் மன இருள் அகன்று அக ஒளி ஏற்பட்டால் தீயன கருகும் ஞான ஒளி மனதில் உண்டாகும். தீயன தூசாகும் என்பதே. கார்த்திகை பவுர்ணமியன்று பல ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகின்றது. அதில் பனை ஓலை கொளுத்தப்படுகின்றது. பனை மரத்தின் ஒவ்வொரு பாகமும் மற்றவர்களுக்காக பயன்படுகின்றது. கொளுத்தப்பட்ட பனை ஓலையின் சாம்பல் கூட புனிதமானது, அதுவும் நமக்கு பயன்படுகின்றது. அது போல நாமும் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதையே இந்த நிகழ்ச்சி உணர்த்துகின்றது.
கார்த்திகை தீபம்
தீப வழிபாட்டில் சிறப்பானது கார்த்திகை தீபம் ஆகும். இது கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவது.
அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா என்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.
என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும். கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல் பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும்.
தீபம் தரும் பலன்கள்
நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும்.
நல்லெண்ணெய் எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப்படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும்.
விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும்.
வேப்பஎண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.
நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும்.
கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வணங்கிட துன்பம் அகலும், கிரகங்களின் சோதனை விலகும்.
மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிப்பீடை, கிரக தோஷம், பங்காளி பகை ஆகியவை நீங்கும்.
வடக்கு திசையில் தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும், திருமணத்தடை, கல்வித்தடை ஆகியவை நீங்கி சர்வமங்களம் உண்டாகும்.
தெற்கு திசையில் தீபம் ஏற்றக்கூடாது. அது அபசகுணம் என அஞ்சப்படுகிறது.
கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.
கணவன்-மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்பஎண்ணெய் தீபம் உகந்தது.
அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது மணக்கு எண்ணெய் தீபம்.
எள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரங்களை திருப்தி செய்யவும் ஏற்றது.
மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.
மந்திர சித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.
கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணெயின் தீபங்கள்.
தேங்காய் விளக்குகள்
தேங்காயை இரு பாதியாக உடைத்து அதில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இப்படி ஏற்றினால் எந்த காரியமும் சித்தியாகும் என்பது நம்பிக்கை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்