சிஎஸ்கே ஸ்கெட்ச் மிஸ்ஸே ஆகாது... ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இளம் வீரர் யார் தெரியுமா?
- சமீர் ரிஸ்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது.
- உத்திரபிரதேசத்தில் டி20 லீக் போட்டியில் 2 சதங்கள் அடித்து அசத்தியவர்.
துபாயில் 17-வது சீசனுக்கான ஐபிஎல் 2024 ஏலம் நடந்தது. இதில், ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலம் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தான் உலகக் கோப்பை 2023 தொடரில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ரூ.1.80 கோடிக்கு வாங்கியது.
இவரைத் தொடர்ந்து ஷர்துல் தாக்கூரை மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது பக்கம் இழுத்துக் கொண்டது. அவர் ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவர்களது வரிசையில் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் 20 வயதான இளம் வீரர் ஒருவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. யார் அந்த 20 வயது வீரர் என்று பார்த்தால், உத்திரபிரதேசத்தில் டி20 லீக் போட்டியில் 2 சதங்கள் அடித்து அசத்தியவர். டிஎன்பிஎல் தொடர் போன்று நடந்த இந்த தொடரில் கான்பூர் சூப்பர் ஸ்டார் அணிக்காக சமீர் ரிஸ்வி விளையாடினார். இதில், அவர் அதிக சிக்சர்கள் அடித்து சாதனை படைத்திருக்கிறார். இந்த தொடரில் விளையாடிய 9 போட்டிகளில் 2 சதங்கள் உள்பட 455 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆனால், அப்போது 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உத்தரப்பிரதேச அணி தேர்வு நடந்தது. இதில், சமீர் ரிஸ்வி பங்கேற்றார். 23 வயதுக்கு உட்பட்டோருக்கான முதல் ஒரு நாள் போட்டியில் உத்தரப்பிரதேச அணி சார்பில் விளையாடிய சமீர் ரிஸ்வி ராஜஸ்தான் அணிக்கு எதிராக 65 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார். இதே போன்று ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் 50 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்.
இந்த தொடரில் மட்டுமே அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதன் மூலமாக இன்று நடந்த ஐபிஎல் ஏலத்தில் அன்கேப்டு பேட்டருக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால், அவர் நிர்ணயித்ததோ ரூ.20 லட்சம் தான். இவரை ஏலம் எடுக்க குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. கடைசியாக சிஎஸ்கே ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது.