22 ஆண்டுகால கிரிக்கெட் பயணம்: கண்ணீருடன் விடை பெற்றார் ஆண்டர்சன்- வைரல் வீடியோ
- 22 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக விளையாடி உள்ளார்.
- 32 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
லண்டன்:
வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் 10-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் 7 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 371 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 47 ஓவரில் 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் 5 விக்கெட்டும் ஆண்டர்சன் 3 விக்கெட்டும் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியுடன் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். இவருக்கு இரு அணி வீரர்களும் பிரியா விடை கொடுத்தனர். 22 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக விளையாடிய அவர் மொத்தமாக 991 விக்கெட்டும், டெஸ்ட் போட்டியில் மட்டும் 188 போட்டிகள் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 32 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார். முதல் மற்றும் 2-வது இடங்கள் முறையே முரளிதரன் (800 விக்கெட்டுகள்), வார்னே (708) உள்ளனர்.
இவரது ஓய்வுக்கு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கைதட்டி விடைக் கொடுத்தனர். ஆண்டர்சன் கண்கலங்கியபடி மைதானத்தில் இருந்து வெளியேறினார். டிரஸ்சிங் அறையில் இருந்த பயிற்சியாளர் மெக்கல்லமை கட்டியணைத்து சென்றார். அவருக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உங்கள் ஓய்வு மகிழ்ச்சிகரமாக இருக்க வாழ்த்துகிறோம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Jimmy waves goodbye to Lord's for one last time ?#ENGvWI #Cricket pic.twitter.com/Hqe0FCiI5o
— Muhammad Zain (@_muhammadzain1) July 12, 2024