கிரிக்கெட்

நோ பாலில் ஹிட் அவுட், ரன் அவுட்: ஆனால் அவுட் இல்லை...அது எப்படி?

Published On 2024-06-21 10:32 GMT   |   Update On 2024-06-21 10:39 GMT
  • ஷான் மசூத் நோ பாலில் ஹிட் விக்கெட் மற்றும் ரன் அவுட் செய்யப்பட்டார்.
  • ஆனாலும் அவருக்கு நாட் அவுட் கொடுக்கப்பட்டது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

லீட்ஸ்:

இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் யார்க்ஷைர் - லாங்க்ஷைர் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த யார்க்ஷைர் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அந்த அணி கேப்டன் ஷான் மசூத் 61 ரன்கள் எடுத்தார்.

இந்தப் போட்டியின் 15-வது ஓவரை ஜாக் பிளேதர்விக் வீசினார். அப்போது ஸ்வீப் ஷாட் ஆட முயன்ற ஷான் மசூதின் கால்கள் ஸ்டம்பில் பட பெயில்ஸ் கீழே விழுந்தது. இதனால் ஹிட் விக்கெட் என நினைத்த அவர் கிரீசை விட்டு வெளியேறினார். ஆனால் அந்த பந்தை நடுவர் நோ பால் என்றார். இதையறியாத ஷான் மசூத், த்ரோ எறிவதை கண்டு வேகமாக ஓடியும் கிரீசை எட்ட முடியாததால் ரன் அவுட் ஆனார்.

ஒரே பந்தில் ஷான் மசூத் ஹிட் விக்கெட் மற்றும் ரன் அவுட் செய்யப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. ஆனாலும் நடுவர் ஷான் மசூதை மீண்டும் விளையாடும்படி கூறியது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

நோ பால் சிக்னலை கவனிக்கவில்லை என்பதால் ஹிட் விக்கெட் என நினைத்து வெளியேற முயற்சித்தேன் என எதிரணி கேப்டன் மற்றும் அம்பயர்களிடம் ஷான் மசூத் கூறினார். இதனால் அம்பயர் ரன் அவுட்டை சரிபார்த்தார்.

எம்.சி.சி. விதிகளின்படி ஒரு பேட்ஸ்மேன் தவறான புரிதல் காரணமாக கிரீசில் இருந்து வெளியேறினால், நடுவர் அந்த பேட்ஸ்மேனை பேட்டிங் செய்ய அழைக்கலாம் அல்லது அந்த பந்தை டெட் பாலாக அறிவிக்கலாம். இதனாலேயே ஷான் மசூத் மீண்டும் பேட்டிங் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News