கிரிக்கெட்

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: ஹாட்ரிக் வெற்றி யாருக்கு? மும்பை-டெல்லி இன்று மோதல்

Published On 2023-03-09 05:17 GMT   |   Update On 2023-03-09 05:17 GMT
  • மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் 143 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது.
  • இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் இன்றைய போட்டி விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) சார்பில் முதலாவது மகளிர் பிரீமியர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள பிராபோர்ன், நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம் ஆகிய 2 மைதானங்களில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த 6-வது 'லீக்' ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் 11 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.

முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது. பின்னர் ஆடிய பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்தது. 2 போட்டியில் தோல்வியை தழுவிய குஜராத்துக்கு முதல் வெற்றி கிடைத்தது. பெங்களூர் அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவியது.

பெண்கள் பிரீமியர் 'லீக்' போட்டியின் 7-வது 'லீக்' ஆட்டம் டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-மெக் லேனிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளுமே 2 போட்டிளில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் 'ஹாட்ரிக்' வெற்றியை பெறப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் 143 ரன் வித்தியாசத்தில் குஜராத்தையும், 2-வது போட்டியில் பெங்களூரை 9 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. டெல்லி அணி முதல் போட்டியில் 60 ரன்னில் பெங்களூரையும், 2-வது ஆட்டத்தில் 42 ரன் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்சையும் வீழ்த்தின.

இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் இன்றைய போட்டி விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News