வழிபாடு

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

Published On 2023-03-23 04:12 GMT   |   Update On 2023-03-23 04:12 GMT
  • ஒவ்வொரு ராசிக்கும் ஏற்படும் பலன்கள் குறித்து வாசிக்கப்பட்டது.
  • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவில் முத்துக்குமாரசுவாமி சன்னதியில், யுகாதி பண்டிகையையொட்டி பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி அங்கு பஞ்சாங்கத்தை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன், முருகப்பெருமான், சிவன், நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு சாயரட்சை பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து அபிஷேக ஆராதனை, சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பஞ்சாங்கம் படிப்பதற்காக மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து பஞ்சாங்க புத்தகங்களுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து கோவில் குருக்கள் செல்வ சுப்பிரமணியம் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பஞ்சாங்கம் படிப்பதை காதால் கேட்பதால் செல்வம், ஆயுள் பெருகும், தீயவை அழிக்கப்படும், காரிய வெற்றி ஏற்படும், ஓராண்டு முழுவதும் கோவில்களுக்கு சென்று வந்த பலனை தரும் என்று அவர் தெரிவித்தார். பின்னர் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.

பஞ்சாங்கத்தில் இந்த ஆண்டு மழை வளம், பலன், கிரகங்களின் நிலை மற்றும் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு ராசிக்கும் ஏற்படும் பலன்கள் குறித்து வாசிக்கப்பட்டது. அதன் பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மணிமாறன், சாய் கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர் கீதா சுப்புராஜ், கோவில் கண்காணிப்பாளர் அழகர்சாமி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Similar News