குழந்தை பராமரிப்பு

சிறுவர்களை பாதிக்கும் சைபர் புல்லிங்

Published On 2024-03-08 10:46 GMT   |   Update On 2024-03-08 10:46 GMT
  • சைபர் புல்லிங் எனப்படும் இணைய வழியிலான மிரட்டல் என்பது உருவாகிறது.
  • சிறுவர்கள் அதில் இருந்து மீளத் தெரியாமல் தவிக்கிறார்கள்.

இப்போதெல்லாம் பாடசாலையில் பயிலும் மாணவ-மாணவிகளும், உயர்கல்வி கற்கும் மாணவ-மாணவிகளும் திடீரென்று அவர்களது நடத்தையில் பெரிய மாற்றம் ஏற்படுவதால் அவர்களுடைய பெற்றோர்கள் கவலை அடைகிறார்கள்.

 போட்டிகள் நிறைந்த இன்றைய சூழலில் இணையதள வசதி மற்றும் இணைய சூழல் அதிகரித்துவிட்ட தருணத்தில் சைபர் புல்லிங் எனப்படும் இணைய வழி மிரட்டல் அதிகரித்திருப்பதால் இது 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் மனநிலையை பாதிக்கிறது என்றும், இது தொடர்பான முழுமையான விழிப்புணர்வை பெற்றோர்களும், இளம் சிறுவர், சிறுமிகளும் பெறவில்லை என்றும் உளவியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இன்றைய சூழலில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதன் அவசியம் என்பது இன்றியமையாததாகிவிட்டது. இணைய வழி தொழில்நுட்பத்தால் உலகம் சிறியதாகி விட்டாலும், பல புதிய வடிவிலான மனநல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. இணையதள வசதி அதிகரித்துவிட்டதாலும், பிறந்து மூன்று மாதமான பச்சிளம் குழந்தைகள் முதல் அனைத்து வயதினரின் கைகளிலும் செல்ஃபோன் எனப்படும் கைபேசி இருப்பதாலும் இத்தகைய உளவியல் பிரச்சினைகள் அதிகரித்திருக்கிறது.

பாடசாலையில் பயிலும் சிறுவர்களும், சிறுமிகளும் பாடசாலையில் இருந்து இல்லம் திரும்பியவுடன் சீரூடையைக் கூட களையாமல் உடனடியாக செல்ஃபோனை தங்கள் வசம் எடுத்துக்கொண்டு, இணையத்தில் ஏதேனும் ஒரு விளையாட்டை விளையாடத் தொடங்குகிறார்கள் அல்லது ஏதேனும் ஒரு இணையதள பக்கத்தை அல்லது சமூக வலைத்தள பக்கத்தை இயக்கி தன்னைப் பற்றிய பிம்பத்தையும், தன்னை பற்றி மற்றவர்களின் விமர்சனத்தையும் ஆர்வத்துடன் காணத் தொடங்குகிறார்கள்.

தற்போது சைபர் புல்லிங் எனப்படும் இணைய வழியிலான மிரட்டல் என்பது உருவாகிறது. இணைய வழி மிரட்டல் என்பது மற்றவர்களை துன்புறுத்தும் நோக்கத்தை கொண்டிருப்பதால், அதனால் பாதிக்கப்படுபவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்திக்கொண்டு, அதில் இருந்து மீளத் தெரியாமல் தவிக்கிறார்கள். இது மன ஆரோக்கியத்தை பாதித்து, அவர்களின் வளர்ச்சியில் இடையூறை ஏற்படுத்துகிறது.

சைபர் புல்லிங் என்பது தற்போதைய சூழலில் பொதுவானதாகிவிட்டது. யாரையும் எந்த ஒரு சூழலையும் துணிவுடன் கையாண்டு அவர்களை பற்றிய எதிர்மறையான கருத்துக்களை பதிவிடுகிறார்கள். இதனுடைய தீவிரத் தன்மை தெரியாமல் ஏதோ ஒரு உந்துதலில் இது போன்ற எதிர்மறையான விமர்சனங்களை இணையத்தில் பதிவிடுகிறார்கள். இதனால் எதிர்மறை விமர்சனத்துக்கு உள்ளாகும்

நபர்கள் மனதளவில் சீர்குலைந்து சோர்வடைகிறார்கள். குறிப்பாக, உருவ கேலி, கடுமையான வார்த்தைகளுடன் கூடிய விமர்சனத்தை குறிப்பிடலாம்.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, இது தவறு என்றாலும், இளம் தலைமுறையினர் பலரும் இத்தகைய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். முதலில் சைபர் புல்லிங் என்பதன் நோக்கத்தை அறிந்துகொள்ள வேண்டும். இது முற்றிலும் மற்றவர்களை காயப்படுத்த வேண்டும் அல்லது பக்கவிளைவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், இது ஒருவரின் உள நலத்தையும், மன அமைதியையும் சிதைக்கிறது. அவர்கள் பாதுகாப்பின்மையை உணரத் தொடங்குகிறார்கள். இதனால் சமூகத்துடனும் மற்றவர்களுடனும் இயல்பாக பழகுவதில் தடையும் இடைவெளியும் உண்டாகிறது. இது அவர்களின் வளர்ச்சியில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தி, அவர்களை முற்றிலும் முடக்குகிறது.

எனவே, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் சைபர் புல்லிங் எனப்படும் இணைய வழி மிரட்டலால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, அவர்களின் அன்றாட பழக்கவழக்க நடைமுறையில் ஏற்பட்டிருக்கும் மாறுபாடான நடவடிக்கைகளை துல்லியமாக அவதானித்து, அவர்களிடம் இது தொடர்பாக எச்சரிக்கைகளை பகிர்ந்துகொள்ள வேண்டும்.

மேலும், உங்கள் பிள்ளைகள் இணைய வழி பயன்பாட்டை மேற்கொள்ளும்போது அவரைப் பற்றிய சுய விபரங்களையும், தனிப்பட்ட பிரத்தியேக தகவல்களையும் ஆன்லைனில் பகிரக்கூடாது என கற்பிக்க வேண்டும்.

உதாரணத்துக்கு உங்கள் வீட்டு முகவரி, உங்களது செல்ஃபோன் எண் போன்றவற்றை பதிவிடக்கூடாது. இது இணையவழி மிரட்டல்காரர்களுக்கு வழிவகுத்துவிடும்.

பிறகு உங்களின் பிள்ளைகளின் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவிடுவதையும் தவிர்க்க வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட விஷயங்களை பற்றியும் தனிப்பட்ட விடயங்களை பற்றியும் இணையவழியில் விவாதிக்க வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும். ஏனெனில், இவை கூட இணையவழி மிரட்டல்காரர்களுக்கு ஆயுதமாக மாறக்கூடும்.

அதே தருணத்தில் எந்த காரணத்தை முன்னிட்டும் உங்களுடைய கடவுச்சொல்லையும் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட கணக்கு விபரங்களையும் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள் என பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

அதனைத் தொடர்ந்து இணையத்தில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடப்படும் விமர்சனங்கள் குறித்தும், கருத்துகள் குறித்தும் எவை நல்லவை? எவை தவறானவை? எவை தவறான உள்நோக்கத்தை கொண்டவை? என்று விஷயத்தையும் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

Tags:    

Similar News