சிதம்பரம் அருகே மணல் லாரிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
- சிதம்பரம் அருகே மணல் லாரிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
- இதுவரை 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடலூர்:
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த விரிவாக்க பணிகளுக்காக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் வட்டம், மாமங்கலம் ஊராட்சி ஆண்டிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள புத்தேரியில் எடுக்கப்படும் செம்மண் மணல் கற்களை லாரியில் ஏற்றி செல்கிறார்கள். தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மாமங்கலம் கிராமத்தில் பொதுமக்கள் வசிக்கக்கூடிய சாலை வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த லாரிகள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுவரை 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், அவ்வழியே செல்லும் பள்ளி, கல்லூரி பேருந்துகளும், மோட்டார் சைக்கிளில் செல்லும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனர்.
இது தொடர்பாக பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டும் இதன் மீது நடவடிக்கை ஏதும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மா.மங்கலம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சோழத்தரம் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அங்கு காரில் வந்த ஒப்பந்தராரரின் பணியாட்கள் பொது மக்கள் மீது காரை ஏற்றுவது போல வந்தனர். இதனால் ஆவேசமடைந்த பொது மக்கள் போலீசார் மற்றும் ஒப்பந்ததாரரின் பணியாட்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சேத்தியாத்போதோப்பு டி.எஸ்.பி. ரூபன்குமார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இச்சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.