கடலூர் மாவட்டத்தில் 1300 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
- விநாயகர் சதுர்த்தி விழா கடலூர் மாவட்டத்தில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
- பெரியவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆர்வமாக சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்பட்ட வண்ண வண்ண விநாயகர் சிலையை வாங்கி சென்றனர்.
கடலூர்:
விநாயகர் சதுர்த்தி விழா கடலூர் மாவட்டத்தில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்த நிலையில் பெரியவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆர்வமாக சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்பட்ட வண்ண வண்ண விநாயகர் சிலையை வாங்கி சென்றனர். மேலும் சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்பட்ட பூஜை பொருட்கள், பழ வகைகள், அவல்,பொறி, எருக்கம் பூ மாலை அருகம்புல் மாலை போன்றவற்றை ஆர்வமாக வாங்கி சென்றனர்.இதனைத் தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு விநாயகர் சிலையை கொண்டு சென்று அபிஷேகம் செய்து மற்றும் தீபாராதனை காண்பித்து கொழுக்கட்டை, நாவல் பழம் போன்றவற்றை படைத்து குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும், கடலூர் மாவட்டத்தில் 1300 இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்ய அனுமதி கோரினர்.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், தமிழக அரசின் விதிகளுக்கு உட்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கினார்.அதன்படி, விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்த பல்வேறு பதிகளை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.மேலும், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடும் இடங்களில் விழா குழுவினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து போலீசார் அனுமதியுடன் 3 அல்லது 5-ம் நாள் விநாயகர் சிலையை அரசு அனுமதி வழங்கிய இடத்தில் கரைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.