கல்லிடைக்குறிச்சி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ரூ.30 லட்சத்தில் புதிய கட்டிடம்
- தொடக்க பள்ளியின் கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தது.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி புதிய வகுப்பறை கட்ட ரூ. 30 லட்சம் ஒதுக்கப்பட்டது.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் அந்த பள்ளியின் கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தது.
இதனால் பள்ளி கட்டிடத்தை சீரமைத்து புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் இஷா என்ற மாணவி முதல்- அமைச்சருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி புதிய வகுப்பறை கட்டுவதற்கு ரூ. 30 லட்சம் ஒதுக்கப்பட்டது.இதனைதொடர்ந்து தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், ஒன்றிய குழு தலைவர் பரணி சேகர் தலைமையில் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் புதிய கட்டிடம் கட்ட முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைத்த மாணவி இஷா அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவ- மாணவிகள் உள்பட 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.