- மதுரை கண் ஆஸ்பத்திரிக்கு இலவசமாக செய்யகூடிய அறுவை சிகிச்சைக்காக கண்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
- விழி கொடுத்து ஒளி ஏற்றுவோம். கண்தானம் செய்வோம்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் தேவதானம் மனற்படுகையை சேர்ந்த பெரியசாமி மனைவியும், கார்த்தி தாயாரும், கட்டிமேடு ஓவிய ஆசிரியர் நேரு சகோதரியுமான மணிமேகலை மரணம் அடைந்தார். முன்னதாக மரணத்திற்கு முன்பே அவர் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மூலம் கண்தானம் செய்ய விருப்பம் தெரிவித்து இருந்தார்.அதன்படி மணிமேகலை கண்களை தானமாக ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மூலம் பெற்று குடும்பத்தினரின் ஒப்புதலோடு மதுரை அரவிந்த கண் மருத்துவமனைக்கு இலவசமாக செய்யகூடிய அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
மறைந்தும் நான்கு நபரின் வாழ்வில் ஒளியேற்றி, உயிர் வாழ்கிற மணிமேகலை குடும்பத்திற்கு ராய் டிரஸ்ட் சார்பாக பாராட்டுதல் தெரிவிக்கப்பட்டது.
இது பற்றி ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் கூறும் போது, தானங்களில் சிறந்தது கண்தானம். உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி கார்னியல் பிளைண்ட்னெஸ் எனப்படும் கருவிழி பாதிப்பானது பார்வையிழப்புக்குக் காரணமான விஷயங்களில் நான்காவது இடம் வகிப்பதாகத் தெரிகிறது.
இறந்தவர்களின் கண்களை அடுத்த 6 - 8 மணி நேரத்துக்குள் எரிக்கவோ, புதைக்கவோ கூடாது. இறந்தவர்களின் கண்கள் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் அவற்றை பிரத்தியோக ஐஸ் பெட்டியில் வைத்து எடுத்து வருவார்கள். கருவிழி மாற்று அறுவைசிகிச்சை தேவைப் படுவோருக்கு அவற்றைப் பொருத்துவதன் மூலம் பார்வை கிடைக்கச் செய்ய முடியும்.
கருவிழி மாற்று அறுவை சிகிச்சையில், பிரச்னைகள் ஏதும் இல்லாத பட்சத்தில் 5 முதல் 15 வருடங்கள் வரை அப்படியே இருக்கும். ஆனால், இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட நபர், அடிக்கடி கண் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
விழி கொடுத்து ஒளி ஏற்றுவோம். கண் தானம் செய்வோம். கண்கள் புதைப்பதற்கு அல்ல, விதைப்பதற்கு என்ற விழிப்புணர்வை அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்றார்.