முன்கூட்டியே பூத்துக்குலுங்கும் காட்டு சூரியகாந்தி மலர்கள்
- சேவல் கொண்டை மலர்களும் ஏராளமாக பூத்துள்ளன.
- புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
கோத்தகிரி பகுதியில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு தாவர இனங்களும் வளருவதற்கான இதமான காலநிலை நிலவுகிறது. நிலச்சரிவை தடுக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் காட்டு சூரியகாந்தி விதைகள் கோத்தகிரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன.'டித்தோனியா டிவர்சிபோலியா' என்ற தாவர இனத்தை சேர்ந்த இந்த செடி அடர்த்தியாக வளர்கிறது. வறட்சி காலங்களில் பூத்துக்குலுங்கும் இந்த பூக்களால், மண்ணின் உறுதித் தன்மை அதிகரிப்பதுடன், நிலச்சரிவையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் பூக்கும் பருவம் கொண்ட காட்டு சூரிய காந்தி பூக்கள் இந்த ஆண்டு சற்று முன்னதாகவே பூக்கத் தொடங்கியுள்ளன. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் பிரதான மாநில நெடுஞ்சாலையில் ஓரங்களிலும், தேயிலை தோட்ட சரிவுகளிலும் கொத்துக்கொத்தாக இந்த மலர்கள் பரவலாக பூத்துள்ளன. வாசமில்லாத மலராக இருந்தாலும், கண்களுக்கு குளிர்ச்சி தரும் மஞ்சள் வண்ணத்தில் பூத்துக்குலுங்கி காண்போரை வசீகரிக்கிறது. இதே போல பிளேம் ஆப் பாரஸ்ட் என்ற செங்காந்தள் மலர்களும், சேவல் கொண்டை மலர்களும் ஏராளமாக பூத்துள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.