பேரூராட்சி குப்பை மேட்டில் பயங்கர தீ விபத்து
- சிவகிரி பேரூராட்சி பகுதியில் சேகரிக்கும் குப்பைகள் சிவகிரி சந்தைமேடு பகுதியில் உள்ள சந்தையின் உள்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.
- இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் குப்பை மேட்டில் இருந்து திடீரென புகை வெளியேறியது.
சிவகிரி:
ஈரோடு மாவட்டம் சிவகிரி பேரூராட்சி பகுதியில் சேகரிக்கும் குப்பைகள் சிவகிரி சந்தைமேடு பகுதியில் உள்ள சந்தையின் உள்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் குப்பைகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே உரப்பூங்காவும் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் குப்பை மேட்டில் இருந்து திடீரென புகை வெளியேறியது.
பின்னர் நேரம் செல்ல, செல்ல இரவு 9 மணியளவில் குப்பை மேட்டில் தீ பிடித்து தீ மளமளவென எரிய தொடங்கியது.
இதைப்பார்த்த பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக ஊழியர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து தீ கட்டுப்படுத்தப்பட்டது.
தீ விபத்து நடந்த குப்பை மேட்டு பகுதிக்கு பேரூராட்சி தலைவர் பிரதீபா கோபிநாத், துணை தலைவர் கோபால், ெசயல் அலுவலர் கண்ணன், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் விசுவநாதன், கவுன்சிலர்கள் தனபால், மருதாச்சலம், மற்றும் வரதராஜ், பாபு ராஜா, செந்தில், கார்த்திகேயன் ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
தீ பிடித்து எரிந்த குப்பை மேட்டில் விடிய விடிய தூய்மை பணியாளர்கள் கண்காணித்தனர். அப்போது தொடர்ந்து காலையிலும் குப்பையில் இருந்து புகை வெளியேறி கொண்டு இருந்தது.
இதையடுத்து மீண்டும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து புகை மீது தண்ணீர் பாய்ச்சினர். மேலும் பொக்லின் எந்திரம் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு புகையை அணைக்கும் பணி நடந்தது.
குப்பை மேட்டில் தீ பிடித்து எரிந்ததால் அங்கு இருந்த பாட்டில்கள் வெடித்து சிதறியது. மேலும் கடுமையான புகை மண்டலம் நிலவியது.