மஞ்சவாடி கணவாய் வரை ரூ.170 கோடியில் நான்கு வழிச்சாலை
- மஞ்சவாடி கணவாய் தருமபுரி மாவட்ட எல்லை வரை நான்கு வழி பாதை அமைக்க 170 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மஞ்சவாடி கணவாய் முதல் மாவட்ட எல்லை முடியும் வரை உள்ள 2 வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக உயர்த்த வேண்டும் எனக் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக வாணியம்பாடி முதல் ஏ.பள்ளிப்பட்டி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நிறைவடைந்து தற்பொழுது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
பிறகு, ஏ.பள்ளிப்பட்டி முதல் மஞ்சவாடி கணவாய் வரை மீதமுள்ள 18 கிலோமீட்டர் இரண்டுவழிச் சாலையை, நான்குவழிச் சாலையாக தரம் உயர்த்த வேண்டும். இதற்காக, மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
இதில், சேலம்- திருப்பத்தூர்- வாணியம்பாடி நான்குவழிச் சாலை NH179 தருமபுரி மாவட்டத்தில் உள்ள மீதமுள்ள 18 கிலோமீட்டர் ஏ.பள்ளிப்பட்டியிலிருந்து வெள்ளையப்பன் கோவில் மஞ்சவாடி கணவாய் தருமபுரி மாவட்ட எல்லை வரை நான்கு வழி பாதை அமைக்க 170 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்கப்படும்.
இச்சாலையால் சேலத்தில் இருந்து தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, அரூா், வாணியம்பாடி வழியாக சென்னை செல்பவர்களுக்கு பயண தூரம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.