- நகராட்சி கூட்டத்திற்கு தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
- 2 தீர்மானங்கள் தற்காலிகமாக வைக்கப்பட்டதாக நகர மன்ற தலைவர் அறிவித்தார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது.
நகர் மன்ற துணைத் தலைவர் ராசையா, ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் லதா, உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், மேலாளர் சண்முகவேல், நகர அமைப்பு அலுவலர் காஜாமைதீன், நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், சுகாதார அலுவலர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேர்தல் பிரிவு மாரியப்பன் 40 தீர்மானங்களையும் வாசித்தார். 2 தீர்மானங்களை உறுப்பினர்கள் எதிர்த்ததால் தற்காலிகமாக அவை நிறுத்தி வைக்கப்பட்டதாக நகர மன்ற தலைவர் அறிவித்தார். தொடர்ந்து மற்ற அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர் மகாலிங்கம் பேசுகையில், கடையநல்லூர் நகர் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கிணறுகள் எத்தனை? பொறம்போக்கு இடங்கள் எவை? என்பதை கண்டறிந்து அதனை பாதுகாக்க வேண்டும். சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை உடனடியாக அகற்ற வேண்டும், தினசரி கழிவுநீர் ஓடைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றார்.
எஸ்.டி.பி. கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் யாசர் கான் பேசுகையில், சமீபத்தில் 50 சதவீதம் மட்டுமே வீட்டு வரியை உயர்த்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் பல்வேறு வீடுகளில் 100 முதல் 200 சதவீதம் வீட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வருகின்றது. எனவே வீட்டு வரி உயர்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்றார். பா.ஜ.க. உறுப்பினர் சங்கர நாராயணன் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை கூட்ட அரங்கில் வைக்க அனுமதிக்க வேண்டும் என பேசினார்.