சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை
- சின்னமுட்டம் துறைமுகம் வெறிச்சோடியது
- 4 நாட்கள் தொடர் மழை எச்சரிக்கை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் மீன் பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்கள் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சின்னமுட்டம் துறைமுகத்திலிருந்து 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இதனால் விசைப்படகுகள் அனைத்தும் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு மீன் வரத்து அடியோடு நின்றுவிட்டன. இதை தொடர்ந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன் சந்தைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனால் மீன் விலையும் 'கிடுகிடு"என்று உயர்ந்து உள்ளது. இதேபோல ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரைகிராமங்களிலும் பெரும்பாலான கட்டுமரம், வள்ளம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரை கிராமங்க ளும் வெறிச்சோடி காணப்படுகிறது.