கனியாமூர் பள்ளியில் நேரடி வகுப்பு நடத்த அனுமதி: ஐகோர்ட்டு உத்தரவு
- 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை நேரடி வகுப்புகள் நடத்தலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
- வேறு பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு பிளஸ்-2 படித்துவந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதற்கு நீதிகேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. பள்ளியில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. அதோடு போலீஸ் ஜீப்களுக்கும், பள்ளி வகுப்பறைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால் பள்ளியில் பலகோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கனியாமூர் சக்திமேல்நிலை பள்ளியில் வகுப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை. வேறு பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கனியாமூர் சக்திமெட்ரிக் மேல்நிலை பள்ளி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதிக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கனியாமூர் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை நேரடி வகுப்புகள் நடத்தலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.