உள்ளூர் செய்திகள்

பெண்களின் பாதுகாப்பு கருதி சென்னையில் வலம் வரப்போகும் இளஞ்சிவப்பு நிற ஆட்டோக்கள்

Published On 2024-10-06 03:06 GMT   |   Update On 2024-10-06 03:06 GMT
  • மானிய விலையில் பெண்களுக்கு வழங்கப்பட உள்ளன.
  • திட்டத்துக்கான அனுமதி வழங்கும் அரசாணை விரைவில் வெளியாகிறது.

சென்னை:

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சென்னையில் 250 இளஞ்சிவப்பு நிற ஆட்டோக்கள் மானிய விலையில் பெண்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்துக்கான அனுமதி வழங்கும் அரசாணை விரைவில் வெளியாகிறது.

தமிழக சட்டசபையில் சமூகநலத்துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் கீதா ஜீவன், 'சென்னை மாநகரத்தில் ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் பெண்களால் இயக்கப்படும் ஆட்டோக்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட போலீஸ் துறை மூலம் கண்காணிக்கப்படும் வகையில் 'இளஞ்சிவப்பு' ஆட்டோ நடைமுறைப்படுத்தப்படும்.

வாகனம் ஓட்டும் உரிமம் பெற்ற ஆர்வமுள்ள 200 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு ஆட்டோ மொத்த விலையில் ரூ.1 லட்சம் அரசால் மானியமாக வழங்கப்படும். கடன் உதவியாக தேசியமயமாக்கப்பட்ட அல்லது இதர வங்கிகளுடன் இணைக்கப்படுவார்கள்' என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்திடும் வகையில் அதற்கான பணிகளை சமூக நலத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இந்த திட்டத்தில் பெண்களை, குறிப்பாக கணவனை இழந்த பெண்களை இணைத்து அவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த சமூக நலத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதி ஒப்புதல் கோரி தமிழக அரசுக்கு சமூக நலத்துறை சார்பில் கருத்துரு வழங்கப்பட்டுள்ளது. அறிவிப்பில் 200 பெண் பயனாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கையை 250 ஆக உயர்த்தவும் சமூக நலத்துறை திட்டமிட்டுள்ளது.

இந்த இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ திட்ட பயனாளிகளை, 'கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்' மூலம் தேர்வு செய்ய சமூக நலத்துறை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

எப்போது வேண்டுமென்றாலும் இதற்கான நிதி ஒப்புதல் வழங்கி தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியாக வாய்ப்பு உள்ளது. அரசாணை வெளியிடப்பட்டவுடன், மானிய விலையிலான 'இளஞ்சிவப்பு' ஆட்டோ பெறும் பயனாளிகள் தேர்வு தொடங்கும் என சமூகநலத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

முதல்கட்டமாக தலைநகர் சென்னையில் 250 பெண்களுக்கு 'இளஞ்சிவப்பு' ஆட்டோ வாங்குவதற்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்க சமூக நலத்துறை திட்டமிட்டுள்ளது.

சென்னையில் வெற்றிகரமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, படிப்படியாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில், பெண்களுக்கான இளஞ்சிவப்பு ஆட்டோ சேவை விரிவுப்படுத்தப்படும் என்று சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News