கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தனம் அரைக்கும் பணி மும்முரம்
- சந்தன மரங்களை சிறு, சிறு துண்டுகளாக்கி அரைக்கும் பணி தொடங்கியது.
- பின் சந்தனம் யாத்ரீகர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
நாகப்பட்டினம்:
உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா, 466- வது ஆண்டு கந்துாரி விழா கடந்த 24- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் விழா வரும் 3-ம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. கந்தூரி விழாவிற்காக தமிழக அரசு சார்பில் 45 கிலோ எடையுள்ள சந்தன மர கட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
இதனை நாகூர் ஆண்டவர் சன்னதி பின்புறம் பாரம்பரிய முறைப்படி விரதம் இருந்து சந்தன கட்டளை அரைத்து வருகின்றனர்.
நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த யாத்திரிகர்கள் 10 நாட்கள் தர்காவில் தங்கி சந்தன மரங்களை சிறு சிறு துண்டுகளாக்கி அரைக்கும் பணி தொடங்கியது.
சந்தன கட்டைகளை ஜவ்வாது கலந்த பன்னீரில் ஊர வைத்து கருங்கற்களில் அரைத்து எடுக்கப்படும். பின்னர் அரைக்கப்பட்ட சந்தனம், குடங்களில் நிரப்பப்பட்டு, நாகை முஸ்லிம் ஜமாத்தார்களிடம் வரும் 2- ம் தேதி ஒப்படைக்கப்படும்.
தொடர்ந்து நாகை யாஹூசைன் பள்ளி வாசலில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு, 3 -ம் தேதி அதிகாலை நாகூர் வந்தடையும்.
பின் தர்கா தலைமாட்டுவாசலில் சந்தனக் குடங்கள் இறக்கப்பட்டு, தர்கா சன்னதிக்குள் கொண்டு செல்லப்பட்டு நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். பின் சந்தனம் யாத்ரீகர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.