கிராம மக்களுடன் தாசில்தார் பேச்சுவார்த்தை
- தி.மு.க. ஆட்சியில் வீடுகள் இல்லாத மக்கள் தேர்வு செய்யப்பட்டு 27 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
- கிராம மக்களுடன் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தில் 1997-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் வீடுகள் இல்லாத மக்கள் தேர்வு செய்யப்பட்டு 27 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் 7 நபர்களுக்கு தகுதி அடிப்படையில் பட்டா ரத்தானதாக கூறப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில் அவர்களுக்காக தேர்வு செய்யப்பட்ட இடம் அளவீடு செய்து கொடுக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி விட்டனர்.
பட்டா இருந்தும் இடம் கிடைக்காமல் விரக்தியடைந்த பயனாளிகள் தங்களுக்கு பட்டாவிற்கான இடத்தை அளவீடு செய்து கொடுக்குமாறு பட்டாவுடன் எஸ்.வி.மங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அலுவல் சம்பந்தமாக அந்தவழியாக சென்ற தாசில்தார் சாந்தி பொதுமக்களை கண்டதும் அவர்களை சந்தித்தார். அப்ேபாது அவர் ஒரு வாரத்திற்குள் அளவீடு செய்து தருவதாக உறுதியளித்தார்.அதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் பயனாளிகளை தாசில்தார் சாந்தி பேச்சுவார்த்தைக்கு அழைத்து 2 வாரங்களில் நில அளவீடு செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.