உள்ளூர் செய்திகள்

வேதாரண்யம் பகுதி கோவில்களில் சிறப்பு யாகம்- பூஜைகள்

Published On 2023-05-06 09:57 GMT   |   Update On 2023-05-06 09:57 GMT
  • ஏராளமான பக்தர்கள் சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் செய்து வழிபாடு நடத்தினர்.
  • கடற்கரையில் கடல் அன்னைக்கு பக்தர்கள் சிறப்பு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர்.

வேதாரண்யம்:

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் பகுதி கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் வனதுர்க்கை அம்மன் கோவிலில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் வளர்த்து பூஜைகள் நடைபெற்றது. பின்னர், புனிதநீர் அடங்கியகடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்க ப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இதேபோல், வேதாரண்யம் மேல வீதியில் உள்ள மாணிக்கவாசகர் மடத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசகருக்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் பாடி மாணிக்கவாசகரை வழிபட்டனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணிக்கவாசகர் மடம் தர்மகத்தா யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவந்திநாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், வேதார ண்யம் அருகே வேம்ப தேவன்காட்டில் மவுனமகான் சித்தர் பீடம் அமைந்துள்ளது. இந்த சித்தர் பீடத்தில் தினசரி பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

மேலும், ஒவ்வொரு மாத பவுர்ணமியிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பலகாரங்கள், பொங்கல் வைத்து படையல் செய்து பின் பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். இந்நிலையில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் செய்து வழிபாடு நடத்தினர்.

மேலும், பவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் கடல் அன்னைக்கு பக்தர்கள் சிறப்பு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர்.

இதேபோல், கோடிய க்காடு குழகர் கோவிலில் உள்ள அமிர்தகர சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதேபோல், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள ஆறுமுகக்கடவுள், மேலகுமரர் மற்றும் நாகை சாலையில் உள்ள பழனியாண்டவர் கோவில், ஆறுகாட்டுத்துறையில் உள்ள முருகன் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Tags:    

Similar News