உள்ளூர் செய்திகள்

நிலக்கோட்டை அருகே 17 வயது சிறுமிக்கு 2 திருமணம் செய்த பெற்றோர் மீது வழக்கு

Published On 2023-03-23 11:09 IST   |   Update On 2023-03-23 11:09:00 IST
  • 15 வயதில் முதல் திருமணமும், 17 வயதில் 2-வது திருமணமும் சிறுமிக்கு நடந்ததது தெரியவந்தது.
  • முதல் கணவரான பிரகாஷ் மற்றும் அவரது பெற்றோர்கள், சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் 2-வது திருமணம் செய்த கணவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகில் உள்ள மட்டப்பாறையை சேர்ந்த பிரசாத் என்பவருக்கும், திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்த சாமிநாதனின் 15 வயது மகளுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்படவே சிறுமி கணவரை விட்டு பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

அதன்பிறகு திண்டுக்கல் மாவட்டம் பஞ்சம்பட்டியை சேர்ந்த அழகர்சாமி என்பவருடன் சிறுமிக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது. இந்த சிறுமிக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அதன்பிறகு அழகர்சாமியுடனும் கருத்துவேறுபாடு ஏற்படவே குழந்தையுடன் அவரை வீட்டைவிட்டு விரட்டி விட்டனர்.

சம்பவத்தன்று திருப்பூர் ரெயில்நிலையத்தில் அழுதபடி கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த சிறுமியிடம் விசாரித்தபோது நடந்த விபரங்களை கூறியுள்ளார். இதனைதொடர்ந்து திருப்பூர் மாநகர போலீசார் வழக்குபதிவு செய்து இந்த வழக்கை நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.

இன்ஸ்பெக்டர் பேபி விசாரணை மேற்கொண்டதில் 15 வயதில் முதல் திருமணமும், 17 வயதில் 2-வது திருமணமும் சிறுமிக்கு நடந்ததது தெரியவந்தது. முதல் கணவரான பிரகாஷ் மற்றும் அவரது பெற்றோர்கள், சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் 2-வது திருமணம் செய்த கணவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News