ஈரோடு மாவட்டத்தில் ரூ.7.72 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
- தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- காரில் ரூ.3 லட்சம் இருந்தது தெரிய வந்தது.
ஈரோடு:
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதையடுத்து ஈரோடு மாவட்டம் முழு வதும் வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என்று பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட தொடங்கி விட்டனர்.
இதற்காக ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படையினர் நிலையான கண்காணிப்பு குழுவினர் அதி நவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் குமலன் குட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த காரில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
தொடர்பாக காரை ஓட்டி வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த டயர் வியாபாரியான சசிகுமார் என்பதும், டயர் விற்பனை செய்த பணத்தை காரில் வைத்து எடுத்து சென்றதும் தெரிய வந்தது.
ஆனால் அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கான ஆவணங்களை வியாபாரி சசிகுமார் காண்பித்து பணத்தை பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள கானாபுதூர் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.1.95 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவரது பெயர் வெங்கடாசலம் என்பதும், காரைக்குடியில் இருந்து கோவைக்கு இடம் வாங்குவதற்காக பணம் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் அந்த பணத்திற்குரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் இன்று காலை ஈரோடு வெட்டுக்காடு வலசு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது காரில் ரூ.3 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவர் சூரம்பட்டி பகுதியை சேர்ந்த வடிவேல் என்பதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது. 3 லட்சம் பணத்திற்குரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதேப்போல் இன்று காலை பறக்கும் படையினர் ஈரோடு ரெயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
அவரை நிறுத்தி சோதனை செய்தபோது 89 பட்டு புடவைகள், 6 சுடிதார், ஒரு நைட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணமும் இருந்தது தெரியவந்தது.
அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் கர்நாடகா மாநிலம் கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த கஜேந்திர ராவ் என்பதும், திருமண வீட்டிற்க்காக ஈரோட்டிற்கு வந்து புடவைகள் வாங்கி சென்று மீண்டும் கர்நாடகா செல்வதற்காக ரெயிலில் ஏற வந்ததாக கூறினார்.
ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக கூறியதால் அவரது புடவைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம், புடவைகளை கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன், தேர்தல் உதவி வட்டாட்சியர் ஜெகநாதன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.