தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்திய மணப்பெண்
- மணமகனும் தாலியை பெற்றுக் கொண்டு மணமகள் கழுத்தில் கட்ட தயாரானார்.
- சைல்டு லைன் அதிகாரிகளுக்கு குறைந்த வயதான எனக்கு தனது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைப்பதாக தகவல் தெரிவித்தார்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கிராமத்தை சேர்ந்த 30 இளைஞர் ஒருவருக்கும் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அவரது உறவினர் மகள் 17 வயது சிறுமி ஒருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிலையில் பெரியார்களால் முடிவு செய்யப்பட்ட நாளான நேற்று பாண்டி கடை தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் திருமணம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி காலை 6.30 மணிக்கு மணமேடைக்கு மணமக்கள் இருவரும் வந்திருந்தனர். புரோகிதர் மந்திரங்கள் ஓதி தாலியை மணமகனிடம் எடுத்துக் கொடுத்தார்.
மணமகனும் தாலியை பெற்றுக் கொண்டு மணமகள் கழுத்தில் கட்ட தயாரானார்.
அப்பொழுது மணப்பெண் தாலி கட்டுவதை தடுத்து நிறுத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் அப்படியே திகைத்து நின்றார். இதனால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பொழுது மணமகள் தான் வைத்திருந்த செல்போன் மூலம் சைல்டு லைன் அதிகாரிகளுக்கு குறைந்த வயதான எனக்கு தனது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைப்பதாக தகவல் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் சைல்டு லைன் அதிகாரிகள் முத்துப்பேட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைடுத்து அங்கு வந்த காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
அதன் பிறகு அங்கு வந்த சைல்டு லைன் அதிகாரிகள் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.