2-வது நாளாக பற்றி எரிகிறது காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் தவிப்பு
- சித்தரேவு- பெரும்பாறை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது.
- தாண்டிக்குடி, பெரும்பாறை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலைக் கிராமங்களான தாண்டிக்குடி, பெரும்பாறை வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மலைப்பகுதியில் உள்ள புல்வெளிகள் கருகி வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. கோடைக்காலம் தொடங்கி விட்டால் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவது வழக்கமாக இருந்து வருகிறது.
அதன்படி நேற்று முன்தினம் மாலை சித்தரேவு- பெரும்பாறை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலகுண்டு வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் வனப்பகுதியில் இருந்த அரிய மூலிகைகள், மரங்கள் எரிந்து சேதமாகின.
இந்தநிலையில் 2-வது நாளாக தாண்டிக்குடியில் உள்ள கரியமாள் கோவில், அழிஞ்சோடை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. சிறிது நேரத்தில் தீ மள மளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு வனச்சரகர் ராம்குமார் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாண்டிக்குடி, பெரும்பாறை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.