உள்ளூர் செய்திகள்

கோமுக்தீஸ்வரர் கோவிலில் திருமூலர் குருபூஜை விழா

Published On 2022-11-09 08:19 GMT   |   Update On 2022-11-09 08:19 GMT
  • அரச மரத்தின் கீழ் தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாடலாக 3000 பாடல்களை இயற்றினார்.
  • திருமூல நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

குத்தாலம்:

திருமந்திரத்தை இயற்றிய திருமூலருக்கு அவர் சமாதியடைந்த திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலில் குருபூஜை விழா நடைபெற்றது.

திருமூலர் ஞானசமாதி அடைந்த தலம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்தில் உள்ள கோமுக்தீஸ்வரர் கோயிலில் உள்ளது.

திருமூலர் சமாதி அடைந்த இடத்தில் இக்கோயிலில் தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

திருமூலர் கோமுக்தீஸ்வரர் கோயிலில் உள்ள படர்அரச மரத்தின்கீழ் தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாடலாக 3000 பாடல்களை இயற்றினார்.

இந்த 3000 பாடல்களே திருமந்திரம் என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், திருமூலரின் குருபூஜை விழாவை முன்னிட்டு கோயிலின் தென்மூலையில் உள்ள திருமூல நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

இதில், திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு, சிறப்பு பூஜைகளை நடத்தினார். தொடர்ந்து, பசுக்களுக்கு பூஜை நடத்தப்பட்டது. விழாவில், 'அருள் அரசர்களும் அடியார்களும்" என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட்டருள அதனை திருவாவடுதுறை ஆதீனக் கோயில்களின் கண்காணிப்பாளர்கள், ஆதீன பள்ளிகளின் ஆசிரியர் பெற்றுக் கொண்டனர்.

முன்னதாக, ஆரவாய் அண்ணல் அறக்கட்டளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து திருமுறை விண்ணப்பம் செய்தனர், சென்னை சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி அமைப்பாளர் உமாமகேஸ்வரி வரவேற்றார்.

புதுச்சேரி அக்ஸி எழிலன் சிறப்புரையாற்றினார்.

கோவில்பட்டி சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி பேராசிரியர் விமலா சுப்பிரமணியம் 'திருமந்திரத்தில் சைவ சித்தாந்தம்' எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

Tags:    

Similar News