உள்ளூர் செய்திகள்

அமராவதி சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்

Published On 2022-12-11 04:28 GMT   |   Update On 2022-12-11 04:28 GMT
  • சர்க்கரை ஆலை மற்றும் வடிப்பாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் 4 மாத சம்பளம் வழங்கப்படாமல் நிலுவை உள்ளது
  • 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி ஓய்வு பெற்று ஒரு ஆண்டுக்கு மேலாகியும் ஓய்வூதியம் வராமல் உள்ளது.

உடுமலை : 

உடுமலையை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவைப்பருவமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலை கடும் நிதி நெருக்கடியில் உள்ளதால் இங்குள்ள தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக அந்தந்த மாதத்தில் வழங்கப்படவேண்டிய சம்பளம் வழங்கப்படுவதில்லை.

அதற்கு பதிலாக 3, 4 மாதங்கள் கழித்து ஓரிரு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. அதற்குள் அடுத்த மாதங்களுக்கான சம்பளம் நிலுவையில் சேர்ந்து கொள்கிறது.

இந்த நிலையில் சர்க்கரை ஆலை மற்றும் வடிப்பாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 4 மாத சம்பளம் வழங்கப்படாமல் நிலுவை உள்ளது. அதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் சம்பள நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.

தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து மாதம்தோறும் பிடித்தம் செய்யப்படும் பி.எப்.தொகை கடந்த 25 மாதங்களாக பி.எப்.அலுவலகத்திற்கு செலுத்தப்படாமல் உள்ளது. இந்த தொகையை ஆலை நிர்வாகம், பி.எப். அலுவலகத்திற்கு செலுத்தினால்தான், ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு மாத ஓய்வுதியம் (பென்சன்) வரும்.

ஆனால் ஆலையில் இருந்து பி.எப்.அலுவலகத்திற்கு செலுத்தவேண்டிய தொகையை ஆலை நிர்வாகம் செலுத்தாமல் நிலுவை வைத்திருப்பதால், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி ஓய்வு பெற்று ஒரு ஆண்டுக்கு மேலாகியும் ஓய்வூதியம் வராமல் உள்ளது.

அதனால் சம்பளத்தில் இருந்து மாதம்தோறும் பிடித்தம் செய்யப்பட்ட பி.எப்.தொகையை பி.எப்.அலுவலகத்திற்கு செலுத்தவேண்டும் என்று தொழிலாளர்கள், தொடர்ந்து ஆலை நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல், கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஆலையின் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Tags:    

Similar News