குண்டடம் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தினை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
- திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு புதிய திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- தனிநபர் இல்ல குடிநீர் இணைப்புகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குண்டடம் :
ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலரும், திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கருணாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் முன்னிலையில் திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் தெரிவித்ததாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரிடையாக சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு புதிய திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், ஜோதியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சேடபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஆய்வு மேற்கொண்டு சமையல் கூடங்கள் ,முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயலியினை பதிவேற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஜோதியம்பட்டி ஊராட்சியில் ரூ.6லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வரும் தனிநபர் இல்ல குடிநீர் இணைப்புகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தாராபுரம் நகராட்சியில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் புதிய பூங்கா கட்டுமானப்பணிகளையும், தாராபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப்பொருட்கள் குறித்தும், தாராபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையின் கோப்புகளையும் ஆய்வு செய்யப்பட்டது. தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டது என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தாராபுரம் கோட்டாட்சியர் குமரேசன், மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர் (சத்துணவு) சிவசண்முகம் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.