உள்ளூர் செய்திகள்

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இளநீர்-ஈக்குமாறு வைக்கப்பட்டுள்ள காட்சி.

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இளநீர், ஈக்குமாறு வைத்து பூஜை - யாருக்கு நன்மை?

Published On 2022-11-11 05:28 GMT   |   Update On 2022-11-11 05:28 GMT
  • கொங்கு மண்டலத்தில் உள்ள முருகப் பெருமான் குடிகொண்டு அருள்பாலிக்கும் கோவில்களில் முக்கியமான கோவிலாகும்.
  • மூலவர் முன்பு பூப்போட்டு உத்தரவு கேட்டு அதன் பின்னர் அந்தப் பொருள் பெட்டியில் வைப்பர்.

காங்கயம் :

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த சிவன்மலை சுப்பிரமணியசாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கொங்கு மண்டலத்தில் உள்ள முருகப் பெருமான் குடிகொண்டு அருள்பாலிக்கும் கோவில்களில் முக்கியமான கோவிலாகும். இது சிவவாக்கிய சித்தர் அருள்பெற்ற ஸ்தலமாகவும், விநாயகப் பெருமான் முருகனை வழிபடும் புகழ்பெற்ற தலமாகவும் விளங்குகிறது. வேறு எந்தக் கோவிலுக்கு இல்லாத சிறப்பு இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும்.

முருகப் பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை சுட்டிக் காட்டி அதை உத்தரவு பெட்டியில் வைக்க ஆணையிடுவார். அவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறுவார். பின்னர் மூலவர் முன்பு பூப்போட்டு உத்தரவு கேட்டு அதன் பின்னர் அந்தப் பொருள் பெட்டியில் வைப்பர். இதுவே வழக்கமாக தொடர்ந்து வருகிறது. இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது.

அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாக வரும் வரை பெட்டியில் வைத்து பூஜிப்பர். இவ்வாறு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பொருள் சமூகத்திற்கு ஏதேனும் ஒருவகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறை மற்றும் எதிர்மறை என எதுவாக இருக்கும். அதன்படி, திருப்பூர் மாவட்டம் மங்களப்பட்டியை சேர்ந்த குமாரசாமி என்ற பக்தர் கனவில் இளநீர் - ஈக்குமாறு வைத்து பூஜை செய்யுமாறு உத்தரவானது. இதைவைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், தற்போது நாடு முழுவதும் நல்ல மழை பெய்து தென்னை உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் கொப்பரை, தேங்காய் உள்ளிட்டவற்றின் விலை சரிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிவன் மலை காரணமூர்த்தி உத்தரவு பெட்டியில் இளநீரும் - ஈர்க்குமாறும் உத்தரவாகி உள்ளதால் தென்னை பொருட்கள் விலை உயரும் அல்லது கடும் விலை சரிவை சந்திக்கலாம்.

இருப்பினும் சிவன்மலை ஆண்டவன் நல்ல வழியை காண்பிப்பார் என நம்புவதாக தெரிவித்தனர். முன்னதாக சைக்கிள் வைத்து பூஜிக்கப்பட்ட போது, அதன் பயன்பாடு சமூகத்தில் வெகுவாக குறைந்து போனது. மண் வைத்து பூஜிக்கப்பட்ட போது நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்தது. துப்பாக்கி தோட்டா வைத்து பூஜிக்கப்பட்ட போது கார்கில் போர் ஏற்பட்டு அதில் இந்தியா வெற்றி வாகை சூடியது.

தண்ணீர் வைத்து பூஜிக்கப்பட்ட போது சுனாமி பேரலை ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் கடலூரை சேர்ந்த கபில்தேவ் என்ற பக்தரின் கனவில் உத்தரவான ஸ்ரீபோகரின் திருவுருவப் படம் வைத்து பூஜிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் ஆன நிலையில் கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த காமராஜ் என்ற பக்தரின் கனவில் 3 கிலோ விபூதி, 7 எலுமிச்சை பழங்கள் உத்தரவானது.

அதை வைத்து ஏப்ரல் 4ஆம் தேதி முதல் பூஜிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் பக்தர் ஒருவரின் கனவில் உத்தரவான நிறைபடி கம்பு வைத்து பூஜை செய்யப்பட்டது. ஒருமுறை தானியங்கள் வைத்து பூஜை செய்த போது, விளைச்சல் உயர்வு மற்றும் விலை உயர்வு ஏற்பட்டது. கம்பு வைத்து பூஜை செய்தபோது மானாவாரி நிலங்கள் மூலம் உணவு தானிய பயிர் விளைச்சல் அதிகரித்தது. கடந்த மாதம் 5 ந் தேதி முதல் வேல் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வைத்து பூஜிக்கப்படும் இளநீர், தென்னை ஈக்குமாறு ஆகியவை சமூகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போக போக தெரியும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News