உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

இளநீரை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2023-03-06 07:14 GMT   |   Update On 2023-03-06 07:14 GMT
  • தேங்காய் விலையும் குறைந்து ரூ 9 முதல் 10 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • இளநீர் ரூ.15 முதல் 17 வரை குறைந்த விலைக்கு இடைத்தரகர்கள் கொள்முதல் செய்து செல்கின்றனர்.

உடுமலை :

உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் தென்னை சாகுபடி பெருமளவில் செய்யப்படுகிறது. இயற்கை தந்துள்ள வரப்பிரசாதமான இளநீர் ஒரு முழுமையான சத்துள்ள நீராகும். இதில் சோடியம்,பொட்டாசியம், கால்சியம், மக்னிசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து உள்ளிட்டவை அடங்கி உள்ளது. இளநீர் குடிப்பதால் உடல் சூடு கட்டுப்படுவதுடன், மலச்சிக்கல், சிறுநீர் எரிச்சல், வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாவதுடன், முகப்பருக்கள் கட்டுப்பட்டு சரும பாதிப்பும் சீராகும்.மேலும் ரத்தத்தை சுத்திகரித்து ரத்த கொதிப்பை குறைத்து குழந்தைகளின் மூளை வளர்ச்சி அடையவும் உதவுகிறது.இதில் உள்ள லாரிக் அமிலம் முதுமை ஏற்படாமல் தடுக்கிறது.

இவ்வளவு சத்துக்கள் சிறப்புகள் வாய்ந்த இளநீரை எப்பொழுது வேண்டுமானலும் குடிக்கலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.விவசாயிகளின் பிரதான தொழிலாக உள்ள தென்னை சாகுபடியில் தற்போதைய சூழலில் பெரியளவில் வருமானம் கிடைப்பதில்லை.தேங்காய் விலையும் குறைந்து ரூ 9 முதல் 10 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூடவே இளநீர் ஒன்றை ரூ 15 முதல் 17 வரை இடம் குறைந்த விலைக்கு இடைத்தரகர்கள் கொள்முதல் செய்து செல்கின்றனர். ஆனால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டிக் கொள்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்பட்டு வருகிறது.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நிலைத்து நின்று வருமானத்தை அளிக்கக்கூடிய தென்னை சாகுபடியை பரம்பரை பரம்பரையாக செய்து வருகின்றோம். தேங்காய் மற்றும் இளநீரை பறித்து விற்பனை செய்வதில் ஏற்பட்டுள்ள கூலி உயர்வு, இடுபொருட்கள் ,பராமரிப்பு செலவு அதிகரிப்பு, விலை குறைவு போன்ற காரணங்களால் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றோம். இந்த சூழலில் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடிய கோடைகால பானமான இளநீரை குறைந்த விலைக்கு இடைத்தரகர்கள் கொள்முதல் செய்து செல்கின்றனர்.ஆனால் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளுக்கும் இரண்டு மடங்கு விலைக்கு விட்டு விற்பனை செய்து விடுகின்றனர். இதனால் வியர்வை சிந்தி உழைப்பை கொட்டி இரவு பகல் பாராமல் பாடுபட்டு பொருளை விளைவித்த எங்களுக்கு லாபம் கிடைப்பதில்லை.

எனவே அரசு விவசாயிகளிடம் நேரடியாக இளநீரை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். லாபத்தை விவசாயியும் அரசும் பங்கிட்டு கொள்ளலாம். இதன் மூலமாக விவசாயியும் பயன் அடைவதுடன் வேலையில்லா தொழிலாளர்களுக்கும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News