உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் 2-வது நாளாக மலர் கண்காட்சியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

Published On 2023-05-20 04:01 GMT   |   Update On 2023-05-20 04:01 GMT
  • ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமின்றி மற்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
  • கொடநாடு காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

அரவேணு:

உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரிக்கு தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துகொண்டே செல்கிறது.

தற்போது நீலகிரியில் கோடை விழாவை முன்னிட்டு பல்வேறு கண்காட்சிகள் நடைபெற்றது வருகிறது. நேற்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது. மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இன்று 2-வது நாளாக காலையிலேயே ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். அவர்கள் பூங்காவில் உள்ள மலர் செடிகளை கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

மேலும் அங்கு பல வண்ண மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மயில், யானை, கழுகு உள்ளிட்ட பல்வேறு அலங்கார சிற்பங்களையும் பார்த்து ரசித்தனர். ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமின்றி மற்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. படகு இல்லம், ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

கோத்தகிரி அருகே கொடநாடு காட்சி முனை அமைந்துள்ளது. தற்போது விடுமுறை என்பதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு, கீழே இறங்கும் வழியில் உள்ள கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று கொடநாடு காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

சுற்றுலா பயணிகள் கொடநாடு காட்சி முனையில் நிலவிய இதமான காலநிலையோடு, இங்கு அமைந்துள்ள தமிழக-கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள மலை முகடுகளின் நடுவே உருவாகும் அடர்ந்த வெண் மேகங்களையும், ஆழமான பள்ளத்தாக்குகள், ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வனப்பகுதிகளை கண்டு ரசித்தனர்.

மேலும் வனப்பகுதிக்கு நடுவே வசிக்கும் பழங்குடியினரின் தெங்குமரஹடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட குக்கிராமங்களையும், தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான பவானிசாகர் அணை மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட் உள்ளிட்ட பகுதிகளையும் கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News